ௐ





ஜீவாதாரம் கோரி நிற்கும் இவ் இளம் குடும்பத்திற்கு ஜீவகாருணியம் செய்ய விரும்பும் உறவுகள் சாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினருடன் அல்லது ”சேகர்” அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவாக கேட்டுக்கொள்ளப்பெறுகின்றனர்
நன்றி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
காலையடி ஞானவேலாயுதர் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இடத்தில் புதிதாக அமைய இருக்கும் அன்னதான மடத்திற்கான அடிக்கல் எம்மூர் "பெரியாரும்", வலது கை கொடுப்பதை இடது கை அறியாது கொடைகள் செய்யும் "கொடைவள்ளல்", இளைப்பாறிய ஆசிரியர் தம்பையா அவர்களால் 09.12.2012 அன்று நாட்டப்பெற்றது.

படம்: பிரகலாதன் தங்கராசா அவர்கள்
அன்னதான மண்டப திருப்பணி - காலையடி ஞானவேலாயுதர் ஆலயம்
பன்னிரு புயத்தாய் போற்றி பசும்பொன் மாமயிலாய் போற்றி
முன்னிய கருணையாறுமுகப் பரம்பொருளே போற்றி
கன்னியரிருவர் நீங்காக் கருணை வாரிட்தியே போற்றி
என்னிரு கண்ணே கண்ணுளிருக்கு மாமணியே போற்றி

கருவறையில் ஞானவேலாக வீற்றிருந்து
நல்லூரில் அலங்காரக் கந்தனாகவும்
செல்வசந்நிதியில் அன்னதானக் கந்தனாகவும்
கதிர்காமத்தில் ஒளிவீசும் கந்தனாகவும்
காலையடியில் கலியுக வரதனாகவும்
அருளாட்சி புரியும் வேலன் துணை
எம் ஊர் பெருமக்கள் கதிர்காமம், திருக்கேதீஸ்வரம், செல்வச்சந்நிதி போன்ற ஆலயங்களில் உற்சவ காலங்களில் மண்டபம் அமைத்து அன்னதானம் செய்து வந்துள்ளமையும், அதன் பின்னர் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம், சாந்தை சித்தி விநாயகர் ஆலயம், காலையடி ஞான வேலாயுதர் ஆலயங்களிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் குறிப்பாக ஜேர்மனி - ஹம் நஹரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் காமாட்சி அம்பாள் ஆலயத்திலும் அன்னதானம் வழங்கி வருகின்றமையும் நாம் யாவரும் அறிந்ததே.
கடந்த காலங்களில் காலையடி ஞானவேலாயுதர் ஆலயத்தில் அன்னதானம் வழங்குவதற்கான மண்டபம் இல்லாத போதும், தற்காலிக கொட்டகை அமைத்து வசதிகள் அற்ற நிலையிலும் அறுசுவை உணவை அன்போடும், பரிவோடும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
இந் நிலையில் எல்லா வசதிகளையும் கொண்ட அன்னதான மண்டபம் அமைப்பதற்கு ஞான வேகாயுதர் திருவருள் கூடியுள்ளதுடன் அதற்கான முயற்சிகளும் அன்னதான சபையினரால் முன்னெடுக்கப்பெற்று வருகின்றன.
எனவே எமது ஊரில் அமைந்துள்ள ஞானவேலாயுதர் ஆலயத்தில் நிரந்தரமாக அமையப் போகும் அன்னதான மண்டபத்தை எல்லா நிகழ்வுகளுக்கும் குறிப்பாக திருவிழாக் காலங்களில் அன்னதான மண்டபமாகவும், ஊர்மக்களின் திருமணம், பூப்புனித நீராட்டுவிழா போன்ற மங்கள நிகழ்வுகளுக்கு உபயோகப் படுத்தப் படக்கூடியதாக வசதிகள் நிறைந்த விழா மண்டபமாகவும் அமைப்பதற்கு திட்டமிடப் பெற்று தேவஸ்தான அன்னதான சபையினர் தங்கள் உதவியை நாடி நிற்கின்றனர்.
அன்னதானம் செய்யப் பெறும் ஒவ்வொரு தடவையும்; உங்கள் நிதி உதவியுடன் அமைத்த மண்டபம் பயன்படுத்தப் பெறுவதனால் ஒவ்வொரு அன்னதானத்திலும் உங்கள் பங்களிப்பு உங்களை அறியாமலேயே பயன்பெறுகின்றது. அதனால் அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அன்னதானத்திலும் அன்னதானம் செய்த புண்ணியம் உங்களை வந்து சேருகின்றது.

அன்னதானமும் அதன் சிறப்பும்:
இப் பூவுலகில் வாழும் அனைவரும் பல வேறு சமயங்களை பின்பற்றி வாழ்கின்ற போதிலும் அச் சமயங்கள் யாவும் மானிட வாழ்கை பற்றிய நன்நெறிகளை மட்டுமே போதிப்பனவாக அமைந்துள்ளன.
சைவ சமயமும் மற்றைய சமயங்களைப்போல் வாழ்க்கை நெறி பற்றி போதிப்பதுடன், அவை யாவற்றிலும் மேலே ஒருபடி சென்று வாழ்கையின் உயிர்நாடியான உயிரின் நிலை பற்றியும் அதை பற்றியுள்ள கர்மவினை பற்றியும் வியந்துரைக்கின்றது.
ஆன்மா கர்ம வினைகளால் பீடிக்கப்பெற்று இருக்கும்போது ஜீவாத்மாவாக பல பிறவிகளை எடுத்து கர்ம வினைகள் நீங்கி பரிசுத்த ஆன்மாவாகி பரமாத்மாவை சென்றடைகின்றன என்பது சைவசமயம் கூறும் உண்மை.
ஒவ்வொரு ஜீவாத்மாவும் தாம் பெற்றுக்கொண்ட கர்ம வினைகளுக்கு ஏற்ப பிறப்பெடுக்கின்றன என்பதுவும், அக் கர்மவினைகளை அவர்கள் அனுபவித்தே தீர்க்கப்பெற வேண்டும் என்பதும், அவற்றை இறையருளினாலும், தான தர்மங்கள் செய்வதனாலும் தீர்த்துக் கொள்ளலாம் எனவும் சைவசமயம் கூறுகின்றது.
அரிதினும் அரிதான மானிடப் பிறவியைப் பெற்ற நாம் எம்மைப் பற்றியுள்ள ஊழ்வினைகளை வேரறுக்கக் கூடியதாக அமைந்த பல விரதங்களையும் தான தர்மங்ககையும் செய்யும்படி எமது சமயம் போதிக்கின்றது. அதன் காரணமாகவே எம்மூதாதையினரும் தான தர்மங்கள் செய்து வந்துள்ளனர்.
தானம் என்பது நம்மிடம் இருக்கும் ஒன்றை ஆது இல்லாது அல்லல் படுவோருக்கு ஈந்து கொள்வதாகும். இதன்போது பெறுபவரும் மகிழ்ச்சி அடைந்து வாழ்த்துவதனால் பெரும் புண்ணியம் கொடுப்போரை வந்தடைகின்றது.
தானங்கள் பல வகை இருந்தாலும் மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்யக்கூடியதாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்
உணவின்றி உயிரில்லை. உலகில்லை. உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது. வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும்.
அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும்.
ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் என போற்றப்பெறுகின்றதூ.
எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.
உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.
இப் புண்ணிய திருப்பணியை செய்வதற்கு புலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் உறவுகள் அனைவரையும் தங்களாலான உதவிகள், நன்கொடைகள் செய்து இத் திருப்பணியை அடுத்த வருட மஹோற்சவ விழாவிற்கு முன் நிறைவேற்ற ஆவன செய்யுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.
தகவல்: நந்தகுமார் அவர்கள்
நன்றி
அன்னதான சபை - ஞான வேலாயுதர் ஆலயம் - காலையடி

சிலாபம் ஸ்ரீ முன்னேஸ்வரர் ஆலய வருடாந்த இரதோற்சவம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. சர்வ அலங்கார நாயகனாக சோடச அலங்காரங்களுடன் தேரில் ஆரோகணித்த உற்சவ மூர்த்தியைக் காண பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர்.
இன்று அதிகாலை மூல மூர்த்திக்கு விசேட பூஜை,அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூஜைகளும் இரதோற்சவமும் இடம்பெற்றன.
Page 1 of 5