Saturday, Mar 24th

Last update10:58:28 PM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: பல்சுவை

சித்திரைப் புத்தாண்டே வருக!

E-mail Print PDFஎங்கும் தமிழர் களித்திருக்க
ஏற்றம் நிறைந்தே புவி சிறக்க
பொங்கும் மகிழ்வே நிறைந்திருக்க
போதும் என்ற மனமிருக்க
வரும் புத்தாண்டை வரவேற்போம்!

அங்கம் வருத்தி அகிலத்தை
அன்னமிட்டுக் காக்கின்ற
கைகள் பொலிந்து தனம் பெருக்க
வையம் சிறந்து வாழ்வினிக்க
வரும் புத்தாண்டை வரவேற்போம்!

எண்ணம் முழுதும் தமிழாக
ஏக்கம் என்றும் தமிழாக
பண்ணும், கலையும் அவை கூறும்
பண்பில் தமிழன் புகழ் வாழ,

தன்னை நினையா மண்ணுயிரைக்
காக்கும் தலைவன் திறம் வாழ
கண் போல் தமிழைக் காக்கின்ற – கலி
காலக் கவிஞன் கவி வாழ,

பொன்னைப், பொருளை விரும்பாமல் – மனம்
போற்றும் துணைவன் நலம் நாடி
எண்ணெய் விளக்கின் ஒளி போல – ஒளி
சேர்க்கும் பெண்மை நெறி வாழ
வரும் புத்தாண்டை வரவேற்போம்!

வாசல் பெருக்கி அழகழகாய்
வண்ண வண்ணக் கோலமிட்டு,
பூசு மஞ்சள் குங்குமமும்,
பூத்துச் சிரிக்கும் மல்லிகையும் – பல
காசு கொடுத்து சரிகையுடன்
வகையாய் மின்னும் பட்டுடுத்தி
நேசமுடனே குலமகளிர்
படைக்கும் பொங்கல் பார்த்திருந்தோம்!

தேசம் விட்டு நீள்புவியில்
எந்தத் திசையில் வாழ்ந்தாலும்
பாசம் பொங்கும் தாய் மடியில்
படைக்கும் பொங்கல் தனிப் பொங்கல்!

வீசும் தென்றற் காற்றிருக்க,
வெள்ளி நிலவு துணையிருக்க
ஆசையுடனே பொங்கி வைத்து
அருகே இருந்து ரசித்திருப்பாள்!

வேஷம் அறியாத் தாய் முகத்தில்
விழிக்கும் நாளே திருனாளாம்! – தாய்
தேசம் கொடுத்த நினைவுகளை
மீட்டே தமிழா பொங்கிடுக!

அன்னைத் தமிழை ஆன்றோர்கள்
கண்ணே என்று அழைத்திட்டார்!
கண்ணைப் போலே பண்பாடு
காக்கும் மொழி என்றறிந்தாரோ?

வண்ணத் தமிழால் கரம் கூப்பி
வணக்கம் உரைத்தேன் ஆகா – என்
உள்ளத்தின்பம் பிறந்ததையா,
உயிர்த் தாய்மொழியால் பொங்கிடுக!

தத்தித் தவழும் சிறு மழலை
தாவிக் குதிக்கும் சிறார் கூட்டம்
தஸ்புஸ் என்றே ஆங்கிலத்தை
தழுவும் சுகத்தை வியந்தே நாம்
யெஸ்யெஸ் என்றே தலையசைத்தால், – தமிழும்
மிஸ்மிஸ் ஆகிப் போய் விடுமே
உணர்ந்தே தமிழா பொங்கிடுக!

பஞ்சம், பசி, நோய், பட்டினிகள்
பாரில் குறைந்து நலம் பெறவே,
தஞ்சம் என்று வருவோரை
தாங்கும் நிலமாய் வளம் பெறவே,
விஞ்சும் திறமை, புகழ், வீரம்
வியக்கும் கலைகள் சிறந்தோங்க,
அஞ்சேல் என்ற பெருவுள்ளம்
அறிவின் பெருக்கம், ஆற்றலெல்லாம்
தங்கும் இனமாய்த் தமிழுள்ளம்
தழைக்கத் தமிழா பொங்கிடுக!

-கவிதாயினி S.லினோதினி


துள்ளி விளையாடுவதைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள்..! சிரிப்போ சிரிப்பு..!

E-mail Print PDF

விரைவில் திரைக்கு வரவிருக்கும் துள்ளி விளையாடு படத்தைப் பார்த்த திரையுலகப் பிரமுகர்கள் பலராலும் சிரிப்பை அடக்க முடியவில்லையாம். அப்படியொரு கொமெடியாக வந்துள்ளதாம் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம். ஆர்.பி. ஸ்டூடியோஸ் தயாரிக்க யுவராஜ் -தீப்தி, பிரகாஷ்ராஜ், ஜெயபிரகாஷ், சென்றாயன், பரோட்டா சூரி ஆகியோர் நடித்துள்ள படம் துள்ளி விளையாடு

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் எந்த கட்டும் இல்லாமல் க்ளீன் யு சான்று அளித்ததோடு, படம் தங்களை ரொம்பவே மகிழ்வித்ததாகத் தெரிவித்தனர்.

தற்போது படத்தை திரையுலக பிரமுகர்கள் சிலருக்குப் போட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்த அத்தனைப் பேருமே விழுந்து விழுந்து சிரித்துள்ளனர்.

அத்தனை நகைச்சுவையாக வந்துள்ளதாம் படம். இது குறித்து இயக்குனர் செல்வா கூறுகையில், இது ஒரு சிங்கத்துக்கும், மூன்று எலிகளுக்குமிடையே நடக்கிற தமாஷ் விளையாட்டு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

நம்ம பிரகாஷ் ராஜ் சார்தான் சிங்கம், யுவராஜ், சூரி, சென்றாயன் ஆகியோரும்தான் அந்த மூன்று எலிகள். இந்த விளையாட்டோடு தீப்தியின் காதல் விளையாட்டும் சேர கொமெடி ப்ளஸ் காதல் கதம்பமாக வந்துள்ளது என்றும் பார்த்த அனைவரும் பாராட்டியுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

அஜித்தின் அதிரடி முடிவு !

E-mail Print PDF

அதிரடி பன்ச் வசனங்களும், கதாநாயகன் அறிமுகமாகும் போது வரும் கதாநாயகனை புகழ்ந்துபாடும் பன்ச் பாடல்களும் இனி தனது படங்களில் இருக்கக் கூடாது என, நடிகர் அஜித் தனது அடுத்த படங்களை இயக்குவுள்ள இயக்குனர்களிடம்  தெரிவித்துள்ளாராம்.

இது என்ன முடிவு என்று பலரும் வியப்பாக பேசி வருகிறார்களாம்.

கதாநாயகர்கள் அனைவரும் கட்டாயமாக வேண்டும் என்று சொல்லும் மிக முக்கிய அம்சம் இனி தனது படத்தில் இருக்கக் கூடாது என ஏன் அஜித் நினைக்கிறார் என, முடிவின் ஆழம் தெரியாமல் பலர் சிந்தித்து வருகிறார்களாம்.

இன்று நேற்று வந்த சின்ன சின்ன நடிகர்கள் எல்லாம் பன்ச் வசனங்களை பேசி நடிப்பதால், திரையுலகின் மூத்த நடிகரான அஜித் அவற்றை தவிர்க்க நினைத்திருக்கக் கூடும் என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ,,, அஜித் எடுக்கும் அதிரடி முடிவுகளால் திரையுலகம் அதிருவது உண்மையே…

அடுப்படியும் போச்சு இடுப்பொடிவும் போச்சு

E-mail Print PDF

அடுப்படிக்குள் அம்மிக் கல்லு
அதன் மேலே அழுக்குத் துணி
அருகேயொரு எண்ணெய் தாச்சி
அதை மூடும் கறை படிந்த
அலுமினிய மூடி.

இவையெல்லாம் இன்றெங்கே?

அம்மியும் ஆட்டுக் கல்லும்
பெயரே தெரியாது
மறைந்துவிட்ட காலம் இது.
இடுப்பொடிய சமைத்தெடுக்கும்
பொழுதெல்லாம் சாயந்துவிட்டது.

Kitchen னேயில்லாமல்
கச்சிதமாய் கடைச் சாப்பாடு
காசு கொடுத்தால்
ஹோம் டெலிவரி
எண்ணெய் பொரியல் தளதளக்க

வேலையற்று இருதயமும்
நின்றுவிட யோசிக்கிறது.

- டாக்டர். எம்.கே.முருகானந்தன்-

 

111/23/05

பாகன் – திரை விமர்சனம்

E-mail Print PDF

குறுக்கு வழியில், சீக்கிரமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஸ்ரீகாந்த், தனது நண்பர்கள் சூரி, பிளாக் பாண்டி ஆகியோருடன் இணைந்து பலபேருடைய பணத்தை அபேஷ் செய்து, பல தொழில்களை தொடங்கி நட்டம் அடைகிறார்.

இந்த நிலையில் பெரிய பணக்காரருடைய பெண்ணை திருமணம் செய்துகொண்டால் சீக்கிரமாக பணக்காரனாகிவிடலாம் என்று யோசித்து, அதற்காக பணக்கார பெண்னான ஜனனி ஐயரை காதலிக்கும், ஸ்ரீகாந்த், காதலையே ஒரு தொழிலாக செய்ய தொடங்குகிறார். சில காட்சிகளுக்குப் பிறகு ஜனனி ஐயரும் ஸ்ரீகாந்தின் காதலை ஏற்கிறார்.

ஜனனி ஐயரின் ரூபத்தில் நமக்கு கோடிகள் பல கிடைக்கப் போகிறது என்று நினைக்கும் ஸ்ரீகாந்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதத்தில், தனது சொத்துக்களை உதரிவிட்டு வருகிறார் ஜனனி. கோடிகளை அள்ளிட்டு வரவேண்டிய தனது காதலி, வெறும் கையோடு வந்ததைப் பார்த்து அதிர்ந்துபோகும் ஸ்ரீகாந்த், தனக்கு காதலை விட பணம் தான் முக்கியம் என்பதை சொல்லி ஜனனியை நடுத்தெருவில் விட்டுவிடுகிறார்.

தனது காதலை இப்படி கசக்கிப்போட்ட ஸ்ரீகாந்தை இனி வாழ்க்கையில் எப்பவுமே சந்திக்க கூடாது என்று எண்ணி வெளிநாட்டுக்கு பறந்துவிடுகிறார் ஜனனி.
இந்த நிலையில்தான் ஒரு திருப்பமாக ஜனனியின் டைரியை படிக்கும் ஸ்ரீகாந்த், ஜனனி தன்னை சிறுவயதில் இருந்தே காதலித்ததை தெரிந்துகொள்கிறார்.

பணம் ஒன்று தான் வாழ்க்கை என்று எண்ணிய ஸ்ரீகாந்த் தனது தவறுகளை உணர்ந்து மனம் வருந்துகிறார். எப்படியாவது ஜனனியை சந்தித்து அவரிடம் மன்னிப்பு கேட்டு, தனது காதலை சொல்ல நினைத்து வெளிநாட்டுக்கு போக தயாராகும் நிலையில், ஸ்ரீகாந்த் இருக்கும் திருப்பூருக்கே படிப்பு சம்மந்தாமக ஜனனி வருகிறார்.

திருப்பூரில் ஜனனியை சந்திக்கும் ஸ்ரீகாந்த், தனது காதலை புதுப்பித்தாரா? அவரை ஜனனி ஏற்றுகொண்டாரா? என்பதை, முழுக்க முழுக்க காமெடியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்லம்.

இப்படத்தின் கதையையே ஒரு சைக்கிள் தான் சொல்கிறது. அந்த சைக்கிளுக்கும் ஸ்ரீகாந்துக்கும் இடையே இருக்கும் பந்தத்தை ஒரு சிறுகதையைப் போல ரொம்ப அழகாக இயக்குநர் அஸ்லம் சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீகாந்தின் வாழ்க்கையில் அந்த சைக்கிள் பயணிக்கும் விதத்தை சாமர்த்தியமாக கையாண்ட இயக்குநர் முதலில் எப்படியாவது பணக்காரனாக ஆகவேண்டும் என்று ஏங்கும் ஸ்ரீகாந்தை, இரண்டாம் பாதியில் காதலுக்காக ஏங்க வைத்து திரைக்கதையில் விறுவிறுப்பு சேர்த்திருக்கிறார்.

கிராமத்து இளைஞனாக வெகுளித்தனமான நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த். சூரி, பாண்டி என்ற ஜூனியர் காமெடி நடிகர்களை சப்போட்டாக வைத்துகொண்டு ஒட்டு மொத்த தியேட்டரையும் குலுங்க வைத்திருக்கும் ஸ்ரீகாந்த், காமெடி சுமையையும் தன் தலைமீது வைத்துகொண்டு சுமந்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்திற்கும் தான் தயார் என்பதை காட்சிக்கு காட்சி இமேஜ் பார்க்காமல் நிரூபிக்கும் ஸ்ரீகாந்த், தனது உடம்பை ‘நண்பன்’ படத்தில் இருந்ததை விட இன்னும் மெலிதாக்கியிருக்கிறார்.

முட்ட கண்ணும், ஆளை விழுங்கும் சிரிப்புமாக நம்மை ரசிக்க வைக்கிறது ஜனனி ஐயரின் அழகு. பாலா படத்தில் கிடைக்காத சில வாய்ப்புகள் ஜனனிக்கு இந்த படத்தில் கிடைத்திருக்கிறது.

சூரி, பிளாக் பாண்டி ஆகியோரது காமெடி தியேட்டரையே அதிர வைக்கும் சிரிப்பு சத்தத்தை ஏற்படுத்துகிறது. “உலகத்திற்கே ஜட்டி தச்சி கொடுக்கும் திருப்பூர்ல இருந்துகிட்டு இப்படி ஓட்ட ஜட்டி போட்டு ஏன்டா திருப்பூருக்கு அவமானத்தை ஏற்படுத்துற…” என்று சூரி, பாண்டியைப் பார்த்து கேட்கும் இடத்தில் திரையரங்கமே சிரிப்பால் அதிர்ந்துப் போகிறது. இதுபோல பல காட்சிகளில் இவர்களது காமெடி பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது.

‘காஞ்சனா’ படத்திற்குப் பிறகு கோவை சரளா, தமிழக மக்களை இப்படத்தின் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். இவருடன் இணைந்து ஸ்ரீகாந்துக்கு அப்பாவாக நடித்த நடிகர், அனுமோகன் ஆகியோரும் அவ்வப்போது நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள். வில்லனாக சில காட்சிகளில் வந்தாலும் தனது வேலை சரியாக செய்திருக்கிறார் இயக்குநர் வெங்கடேஷ்.

ஜேம்ஸ் வசந்தனின் இசையில் புரியவில்லை என்றாலும் “சம்பா சம்பா…” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. மற்றப் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது.

லக்ஷ்மணின் ஒளிப்பதிவில் சாதரண லொக்கேஷன்கள் கூட பிரமாண்டாக தெரிகிறது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும், தேர்வு செய்த லொக்கேஷன்களும் பிரமாதம்.

காட்சிக்கு காட்சி ரசிகர்கள் சிரிக்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்து இயக்குநர் அஸ்லம் திரைக்கதை அமைத்திருந்தாலும், குறுக்கு வழியில் முன்னேற நினைப்பவர்களுக்கு ஒரு நேர்மையான வழியை காண்பித்து மெசஜ் ஒன்றையும் சொல்லியிருக்கிறார்.

பரதேசி - திரை விமர்சனம்

E-mail Print PDF

ரிலீசாவதற்கு முன்பே பாலாவின் படங்களில் மிகச்சிறந்த படம் என்ற பெருமையை தட்டி சென்று விட்ட பரதேசி, இந்திய சினிமாவின் மிகச் சிறந்த படங்களுள் ஒன்று என்பதை படம் பார்த்த யாராலும் மறுக்க முடியாது.

இந்தியர்களை எப்படி டீ குடிக்கும் பழக்கத்திற்கு ஆங்கிலேயர்கள் அடிமை ஆக்கினார்கள் என்பதையும், அதற்காக அப்பாவி மக்கள் எப்படி எல்லாம் சிதைக்கப்பட்டார்கள் என்பதையும் மனதில் பதியும் படி சொல்லி இருக்கிறார் பாலா.

1939- ல் சாலூர் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கிறது கதை. கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்க்கை, பழக்கவழக்கங்கள், திருமணமுறை என எந்த சலனமும் இல்லாமல் பயணிக்கிறது.

தண்டோரா போடுபவனாக அதர்வா (ஒட்டு பொறுக்கி (எ) ராசா) . வெகுளியான அதர்வாவை காதலிக்கிறார் வேதிகா(அங்கம்மா). வறட்சி காரணமாக பக்கத்து ஊருக்கு வேலைக்கு செல்லும் அதர்வாவை கங்காணி சந்திக்கிறான். தனக்கு சொந்தமாக ஒரு தேயிலை தோட்டம் உள்ளதாகவும், அங்கெ வேலை செய்தால் கூலி நிறைய கிடைக்கும் என்றும், மனைவி மக்களை உடன் அழைத்து வரலாம் என்றும், வருடம் ஒருமுறை சொந்த மண்ணுக்கு வரலாம் என்றும் ஆசை காட்டுகிறான். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்கும் அப்பாவி மக்கள், 48 நாட்கள் கஷ்டப்பட்டு நடந்து தேயிலை தோட்டத்தை அடைகிறார்கள்.

இதற்கிடையில் அதர்வாவுடன் நெருங்கி பழகியதால் அங்கம்மா கர்ப்பம் அடைகிறாள். வீட்டில் இருந்து துரத்தப்படும் அங்கம்மா அதர்வாவின் பாட்டி வீட்டுக்கு வந்து விடுகிறாள். தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட தன்ஷிகாவை(மரகதம்) சந்திக்கிறான் ராசா. தேயிலை தோட்டத்தை கண்காணிக்கும் வெள்ளைக்காரன் பெண்களை தவறாக நடத்துகிறான். இந்த நிலையில் அங்கம்மா கர்ப்பமாக உள்ள செய்தி பாட்டியுடன் இருந்து வந்த கடிதம் மூலம் அதர்வாவுக்கு தெரிகிறது.

விடுப்பு தருவதாக கூறி அனைவரையும் அழைக்கும் கங்காணி, சம்பளத்தை பிடித்து விட்டு இன்னும் சில வருடங்கள் வேலை செய்ய வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறான். அங்கம்மாவை பார்க்க துடிக்கும் அதர்வா காட்டை விட்டு தப்பி ஓட முயலும் போது மாட்டிக் கொள்கிறான். மீண்டும் தப்பி ஓடாமல் இருக்க கால் நரம்பை துண்டித்து விடுகிறார்கள். இந்த சூழ்நிலையில் பரவி வரும் விஷ காய்ச்சலுக்கு மரகதம் பலியாகி விடுகிறாள். ராசா தப்பித்தானா?

கொத்தடிமைகளின் நிலை என்ன ஆனது என்பதை தனக்கே உரிய பாணியில் சொல்லி இருக்கிறார் பாலா.

கதாநாயகன் அதர்வா முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கிளைமாக்சில் இவர் கதறி அழும் காட்சி கல் நெஞ்சையும் கரைய வைத்து விடும். கவர்ச்சி, குத்தாட்டம் என ஆடிக்கொண்டிருந்த வேதிகா, இந்தப் படத்தில் நடிப்பு சாம்ராஜ்யமே நடத்தி இருக்கிறார்.

இரண்டாம் பாதியில் தன்சிகாவின் நடிப்பு அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும் கணமாக்கித்தருகிறது. படத்தின் தரத்தையறிந்து அதற்கேற்ப இசையில் விளையாடி இருக்கிறார் ஜி வி பிரகாஷ். உலகத் தரமான படம் என்று கூறுவார்களே அது இது தானோ என்ற எண்ணம் வருகிறது.

சாட்டையடி வசனங்கள், சோகம் கலந்த நகைச்சுவை, நெஞ்சை அதிர வைக்கும் க்ளைமாக்ஸ் என படம் முழுக்க பட்டையைக் கிளப்பி இருக்கிறார் பாலா. இந்தப் படத்தைப் பார்த்து விட்டு டீ குடிக்கும் போதெல்லாம், இதற்காக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் படும் கஷ்டங்கள் தான் நினைவுக்கு வரும்.

டீயைப் பார்த்தால் இரத்தம் என்று கூட தோன்றலாம். அந்த அளவுக்கு நெஞ்சைப் பிழியும் வலியை படம் பார்ப்பவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.
இந்த வருடத்திற்கான அனைத்து விருதகளையும் பரதேசி படத்துக்கே கொடுத்து விடலாம். நான் பாலாவின் ரசிகன் என இனி காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்லலாம்.

Page 6 of 84

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்