Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சைவமும் தமிழும்

சுகபோக இன்பம் தரும் சுக்கிர பகவான்

E-mail Print PDF

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் பிராப்தப்படி ஏற்ற, இறக்கங்கள், இன்ப, துன்பங்கள், லாப நஷ்டங்கள், நிறை குறைகள் அமைகின்றன. இதற்கெல்லாம் காரணம் நமது பூர்வ புண்ணிய கர்ம வினையாகும். அந்த கர்ம வினைக்கேற்பவே இந்த பூமியில் பிறக்கிறோம். அந்தந்த காலகட்டத்தில் என்ன நடக்க வேண்டும் என்பதை நம் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் தீர்மானிக்கின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள், திசைகள், புக்திகள், அந்தரங்கள், காரகத்துவம் என பல வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு ஆதிக்கம், காரகத்துவம் தரப்பட்டுள்ளது.

அந்த வகையில் அசுரகுரு என்று போற்றப்படுபவரும், உலகை காக்க வான் மழை பொழிவிப்பவரும், இறந்தவர்களையும் எழுப்பும் ஆற்றல் உடையவரும், சுகபோக இன்பங்களை தருபவருமான சுக்கிரன் நம் வாழ்க்கையின் மிக முக்கிய கிரகம் ஆவார். ஒருவர் சாதாரண நிலையில் இருந்து திடீர் ராஜயோக பலன்கள், பதவி, பட்டம், வீடு, வாசல், பங்களா, கார், அதிகாரம் என்று அமையும்போது, அவருக்கென்னப்பா.. ”சுக்கிர திசை” அடிக்கிறது என்று சொல்வார்கள். அந்தளவுக்கு வினோதங்கள் புரிந்து ஒருவரது வாழ்வில் வளங்களை சேர்க்கும் வல்லமை படைத்தவர் சுக்கிர பகவான்.

ஆய கலைகள், அனைத்து விதமான ஆசாபாசங்களுக்கும் அதிகாரம் பெற்றவர், காதலின் ஏகபோக சக்கரவர்த்தி, சகல சௌபாக்ய யோகங்களையும் தரவல்லவர் சுக்கிரன். இவரை ”சிற்றின்பத்தின் திறவுகோல்” என்றுகூட சொல்லலாம். திருமண பந்தத்துக்கு காரணமானவர் என்பதால் இவருக்கு ”களத்திர காரகன்” என்ற அந்தஸ்து உண்டு. இப்படிப்பட்ட சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல அம்சங்களுடன் அமைந்தால் எல்லா விதமான சுபசௌபாக்யமும் கிடைக்கும். பருவ வயதில் திருமணம் கூடிவரும். நீங்காத செல்வமும், நிறைவான சந்தோஷமும் கிடைக்கும்.

வழிபாடு - பரிகாரங்கள்
சுக்கிரன் பலம் பெற்றிருந்தாலும், பலம் குறைந்திருந்தாலும், சுக்கிரனுக்குரிய வழிபாடுகள், பரிகாரங்கள் செய்வதன் மூலம் யோகங்கள் விருத்தியடையும்.

பெண்கள் சுக்கிர வாரம் எனும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து வீட்டில் திருவிளக்கு பூஜை செய்வது நலம் பயக்கும். மாலையில் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயிலுக்கு சென்று வழிபடலாம். அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீலட்சுமி காயத்ரி மந்திரம், சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்லலாம்.

ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்து பிரார்த்திக்கலாம். சுக்கிர ஷேத்திரமான கஞ்சனூர், கும்பகோணம் அருகில் உள்ளது. இங்கு சென்று, தேவியருடன் அருள் பாலிக்கும் சுக்கிரனை வழிபட்டால் எல்லா வகையான திருமண தோஷங்களும் நீங்கும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பவர்கள் ஒன்று கூடுவார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீச்சரம் என்ற ஸ்தலம் சுக்கிரனுக்கு உரியது. இங்குள்ள சுக்கிரேஸ்வரர் சுக்கிரனின் அம்சமாக உள்ளார். இவரை வழிபட குடும்பத்தில் நலங்களும் வளங்களும் சேரும். தன, தான்ய விருத்தி உண்டாகும். கண்கள் சம்பந்தமான கோளாறுகள் நிவர்த்தியாகும். பரிகார தலங்கள், விசேஷ கோயில்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டருகே இருக்கும் கோயிலில் நவக்கிரக சன்னதியில் சுக்கிர பகவானை வழிபடலாம். வருடா வருடம் வரும் வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, பூ, பழம் கொடுத்து ஆசி பெற்றால் தடைகள் நீங்கும். சுபிட்சம் மலரும். நாளை சுக்கிர பகவான் ஜெயந்தியாகும். இந்நாளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபட்டு அவரது அருள் கடாட்சம் பெறுவோமாக!

நன்றி: ஜோதிட முரசு - மிதுனம் செல்வம்

சுக்கிரன் அம்சங்கள்

கிழமை    : வெள்ளி
தேதிகள்    : 6, 15, 24
நட்சத்திரம்    : பரணி, பூரம், பூராடம்
ராசிகள்    : ரிஷபம், துலாம்
உச்சம்    : மீனம்
நீச்சம்    : கன்னி
ரத்தினம்    : வைரம்
உலோகம்    : வெள்ளி
தானியம்    : மொச்சை
நிறம்    : வெண்மை
ஆடை    : வெண்பட்டு
திசா காலம்    : 20 ஆண்டுகள்

சர்வம் புதன் மயம்

E-mail Print PDF

நவகிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான சக்தி, ஆற்றல், உரிமை மற்றும் அதிகார அமைப்புகள் உள்ளன. சில கிரகங்களுக்கு மிக முக்கியமான காரகங்களும், அதிகாரங்களும்  கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான். சவும்யன் என்று அழைக்கப்படும் இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.

அதனால் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். புத்திதாதா என்றும் தனப்ரதன் என்றும் சிறப்பிக்கப்படுகிறார். சர்வம் பிரம்மமயம் என்று சொல்வார்கள். ஆனால், மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, சர்வம் புதன்மயம் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்தளவிற்கு புதன் கிரகம் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய ஸ்தானம் வகிக்கிறது.

புதன் ஆதிக்கம்
எண்ணங்களின் சேர்க்கையே மனம். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் மகன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டம், அறிவு, ஆற்றல் ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. ஆதிக்கம், பேச்சாற்றல், சொல்லாற்றல், கணிதம், சாதுர்யம், கபடம், கவிதை, கதை, சிற்பம், சித்திரம், ஓவியம், இயல், இசை, நாடகம், நுண்கலைகள் என பல துறைகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. தர்க்கவாதம் செய்தல், சமயோசித புத்தியுடன் பேசுதல் ஆகியவற்றிற்கு புதன் அருள் தேவை.

புதனின் அமைப்பு ஜாதகத்தில் வலுவாக இருந்தால்தான் எந்தத் துறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். கல்வி என்பது ஓர் அழியாச் செல்வம். அந்த கல்விக்கு அதிபதியாக புதன் திகழ்கிறார். இன்றைய சூழ்நிலையில் கல்வி என்ற சரஸ்வதி நம்மிடம் இருந்தால் தனத்தை தரும் மகாலட்சுமி தானாக நம்மிடம் வந்து விடுகிறாள்.

சட்டத்தின் சாராம்சம், நுணுக்கங்கள் தெரிந்த நீதிபதிகள், வாதத்திறமை மிக்க வக்கீல்கள், புத்திக் கூர்மையுடன் விளங்குகின்ற கணித ஆசிரியர், பேராசிரியர், ஆராய்ச்சியாளர்கள், ஆடிட்டர்கள், சிந்தனைத்திறன், கற்பனைத்திறன் மிக்க பத்திரிகையாளர்கள், மீடியா, பதிப்பகத்துறையினர், பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராயும் திறன் படைத்த ஜோதிடர்கள், வான சாஸ்திர நிபுணர்கள், ஐ.டி.துறை மற்றும் கணித வல்லுநர்கள், தொலைத்தொடர்புதுறை, அஞ்சல் துறை, நிதித்துறை, வங்கி ஆகியவற்றில் வேலை பார்க்கும் யோகம் பெறவும், அத்துறைகளில் நமது பணியை சிறப்பாக செய்து சாதனை படைக்கவும் புதபகவானின் அருள்பார்வை கட்டாயம் தேவை. அவரது அருள் கடாட்சம் இருந்தால்தான் இத்துறைகளில் கால்பதிக்க முடியும் என்பது உறுதி.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
‘பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது’ என்று சொல்வார்கள். இதை சிலர் தவறாக புதன் கிழமை என்று அர்த்தம் செய்து கொண்டி ருக்கிறார்கள். அதாவது, இந்த இடத்தில் பொன் என்பது தன, புத்திரகாரகனான குருவைக் குறிக்கும். குருவிற்கு, தனம் எனும் பணத்தையும், புத்திரயோகம் என்னும் குழந்தை செல்வத்தையும் தரக்கூடிய ஆற்றல் உள்ளது. ஆனால், பொன்னவன் என்று அழைக்கப்படும் குருவின் அருளுடன், புதனின் பலமும் சேருவது மிக அவசியம்.

ஏனென்றால் ஒருவர் எவ்வளவுதான் பொன், பொருள், செல்வம் ஈட்டினாலும் அதை சரியான வகையில் தக்க வைத்து ஒன்றுக்கு பத்தாக பெருக்கி, அந்தப் பணத்தை சரியான வகையில் முதலீடு செய்து கணக்கு, வழக்கு பார்க்க, புதனின் பலம் அவசியம் தேவை. அதேபோல் குழந்தை செல்வத்தை தருபவர் புத்திரகாரகனான குரு. என்றாலும் அந்தக் கருவை உற்பத்தி செய்வதற்கு உறுதுணையாகவும், ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு முக்கிய அம்சமான நரம்பு மண்டலத்தை ஆள்பவர் புதன். இவருடைய பரிபூரண அருள் இருந்தால்தான் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதை வைத்துதான் பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்ற சொல் வழக்கு உண்டானது.

புதனின் அருட்கொடை இது போன்றே எல்லா விஷயங்களுக்கும் தேவைப்படுகிறது. மூளை, நரம்பு மண்டலங்களின் செயலாற்றல் இல்லாமல் மனிதனால் எதுவும் செய்ய முடியாது. ‘எல்லாமே புதன்தான் என்றால் மற்ற கிரகங்களுக்கு வேலை இல்லையா?’ என்று கேட்கத் தோன்றும். ஆம், உண்மைதான். எல்லா கிரகங்களின் காரகத்திலும் புதனின் ஊடுருவல் இருக்கும். உதாரணத்திற்கு சினிமாத்துறைக்கு முக்கிய கிரகம் சுக்கிரன். ஆனால், புதனின் அருள் இருந்தால்தான் டைரக்ஷன், நடிப்பு, வசன உச்சரிப்பு, நகைச்சுவை, பலகுரலில் பேசும் திறமை என்று எல்லாம் வெளிப்படும். இதைப் போன்றே எல்லா துறைகளிலும் புதனின் பங்கு மிக முக்கியமானதாகும். சேரும் இடம், பார்க்கும் இடம், இருக்கின்ற ராசிக்கு தக்கவாறு, புதன் ஜாதகரை மாற்றிவிடுவார்.

புதனின் வக்ர காலம்
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். அதேநேரத்தில் கிரக மாற்றங்களின்படி புதன் வக்ரமாக  இருக்கும் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது; திட்டங்கள் போடக்கூடாது. புதிய தொழில், வியாபார சம்பந்தமான ஆலோசனைகள், ஒப்பந்தங்கள் போன்றவற்றை செய்தால் அதில் ஏதாவது குறைபாடு, பிரச்னை ஏற்படும். வேலை முடியாமல் இழுத்தடிக்கும். எந்த விஷயத்திலும் தடை, தாமதம் உண்டாகும். ஏற்கனவே முடிவு செய்த விஷயங்களில் தாமதம் வரலாம்.

காதலர்களுக்கு வீண் சந்தேகங்கள், பிணக்குகள் ஏற்படலாம். குறிப்பாக வண்டி, வாகனம், டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தொலைத் தொடர்பு, தொலைபேசி வியாபார இடமாற்றம், ஏஜென்சி போன்ற தொழில் சம்பந்தமான விவகாரங்களை புதனின் கோட்சார நிலை அறிந்து செய்வது நல்லது. வக்ரமாகவும், நீசமாகவும், அஸ்தங்கமாகவும் புதன் இருக்கும் காலங்களை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

தீயச் செயல்கள்
புதன் சமநிலை கிரகம். இந்தக் கிரகம் ஒருவரை நல்வழியிலும் கொண்டு செல்லும்; தீய வழியிலும் கொண்டு செல்லும். மனிதனின் எல்லா வகை போதைப் பழக்கங்களுக்கும் வலிமை இல்லாத புதனே காரணம். புதனுடன் நீச்சக் கிரகங்கள், வக்ர கிரகங்கள், பாவகிரகங்கள், 6, 8, 12ம் இட ஆதிபத்யம் பெற்ற கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் ஜாதகரின் புத்தி, அறிவு, ஆற்றல் எல்லாம் தீயவழிகளில் வேலை செய்யும். தன்னுடைய மூளையை கெட்ட விஷயங்களுக்கு பயன்படுத்துவார். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்லுவார். தீவிரவாத சிந்தனைகள் தோன்றும். பல அழிவு வேலைகளுக்குக் காரணமாக இருப்பார். இவர் செய்யும் தகிடுதத்தங்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

புதனால் உண்டாகும் நோய்கள்

புதன் உடற்கூறு இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இவர் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். இவர் அலித்தன்மையுடைய கிரகம். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் ஏற்படுத்தக்கூடியவர். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், பய உணர்வு, சஞ்சலம், சபல புத்தி, மனநலம் குன்றுதல், காக்கை வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகும். இந்த விஷயங்கள் புதனின் தசா புக்தி காலங்களில் அதிகமாக இருக்கும். அத்துடன் புதனுடன் சேர்ந்த கிரகங்கள், பார்க்கும் கிரகங்களின் தசாபுக்திகளிலும் உடல் கோளாறுகள் ஏற்படும்.

புதனின் அம்சங்கள்
கிரகம் - புதன்
ராசி வீடுகள் - மிதுனம், கன்னி
நிறம் - பச்சை
உச்ச ராசி - கன்னி
நீச்ச ராசி - மீனம்
எண் கணிதம் - 5
நட்சத்திரங்கள் - ஆயில்யம், கேட்டை, ரேவதி
தசா காலம் - 17 ஆண்டுகள்
அம்சம் - விஷ்ணு
ரத்தினம் - மரகதம்
தானியம் - பச்சைப்பயறு
மலர் - வெண்காந்தள்
திசை - வடகிழக்கு
சமித்து - நாயுருவி
உலோகம் - பித்தளை
வாகனம் - குதிரை
காரகம் - தாய்மாமன் - கல்வி
பரிகார ஸ்தலம் - மதுரை, திருவெண்காடு.

நன்றி: ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

வீரம், ஆற்றல், யோகம் தரும் செவ்வாய்!

E-mail Print PDF

நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம், வீரதீர  செயல்கள், அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற பல தன்மைகள்  கொண்ட கிரகம். 

போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட்   போன்றவற்றுக்கான அதிபதி  செவ்வாய். நம் உடலில் முக்கியமாக ரத்த சம்பந்தமான சில விஷயங்கள் சீராக இருக்க செவ்வாய் முக்கிய காரணம். 

போட்டி, பந்தயங்கள், உடல்திறன், சாகச நிகழ்ச்சிகள் போன்றவற்றில் புகழ்பெறவும் ரியல் எஸ்டேட், பில்டிங் கான்ட்ராக்ட், சிவில் இன்ஜினியரிங்,  அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர்கள், நெருப்பு  சம்பந்தமான தொழில்கள் சிறக்கவும் செவ்வாயின் அருள்கடாட்சம் அவசியம் தேவை.

அரசாங்க உயர் பதவிக்கு அனுகிரகம் செய்வதும் செவ்வாய்தான். தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு,  குரலில்  அதிகாரத்தை ஏற்படுத்தி தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. ரத்த கிரகம் நம் உடலில்  ரத்தத்திற்கும், வெப்பத்திற்கும் காரகமாக இருப்பவர் செவ்வாய். இவர் பலமாக இருந்தால்தான் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். மூளைக்கு ஆற்றலும்,  சக்தியும் தரக்கூடிய கிரகம் செவ்வாய்.

பெண்கள் பூப்பெய்துவதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கக்கூடியவர். செவ்வாய்  பலம் குறைந்தால் உடலில் ரத்த  சம்பந்தமான நோய்கள் தோன்றும். குறைந்த ரத்த அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடியவர். சகோதரகாரகன் ஒவ்வொரு  கிரகத்துக்கும் ஒவ்வொரு காரகம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கு சகோதர காரகன் என்ற சிறப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கு சகோதர, சகோதரிகள் உண்டா? அவர்களால் ஒருவருக்கொருவர் ஆதாயம் அனுகூலம் ஏற்படுமா? சகோதர பிரச்னைகள் உண்டாகுமா?  பூர்வீக  சொத்தில் உரிய பங்கு கிடைக்குமா என்பனவற்றை எல்லாம் தீர்மானிக்கக்கூடியவர் செவ்வாய்.

செவ்வாய் பூமிக்குக் காரகன். இவர் அருள்  இருந்தால்தான் பூர்வீக  சொத்துகள் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லாமல் கைக்கு வந்து சேரும். சொந்தமாக வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட்,  பங்களா போன்றவை செவ்வாய்  பகவானின் பரிபூரண தயவு இருந்தால்தான் நம்மால் பெறமுடியும். அதேபோல் ரியல் எஸ்டேட் என்ற நிலம்  வாங்கி விற்கும் தொழில், கட்டிடத் தொழில், சிவில்  இன்ஜினியரிங் போன்றவற்றில் புகழும், பணமும் குவியும்.

பிறந்த லக்னமும் செவ்வாயும் தரும் யோகம்
எந்த லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எந்த வகையான யோகங்களைத் தருவார்?

மேஷ லக்னம் ராசி - தலைமை பதவி, அதிகாரம், ஆட்சி பீடம்.

ரிஷப லக்னம் ராசி - மனைவி வழியில் கூட்டுத் தொழில் மூலம் யோகம்.

கடக லக்னம் ராசி - தொழில், பூர்வ புண்ணிய அமைப்பு, குழந்தைகளால் செல்வாக்கு.

சிம்ம லக்னம் ராசி - நிலபுலன்கள், தந்தை வழியில் பூர்வீக சொத்து மூலம் கல்வி, செல்வம் மற்றும் வெளிநாட்டு தொடர்புகளால் யோகம்.

துலா லக்னம் ராசி - சொல்லாற்றல், மனைவி வகையில் யோகம்.

விருச்சிக லக்னம் ராசி - உயர்பதவி, ஆட்சி, அதிகாரத்தால் யோகம்.

தனுசு லக்னம் ராசி - பூர்வ புண்ணிய பலத்தின்படி யோகம், திடீர் அதிர்ஷ்டங்கள், பிள்ளைகளால் யோகம்.

மகர லக்னம் ராசி - தாய், தாய்வழி உறவுகளால் யோகம், நில புலன்கள், கல்வி செல்வத்தால் யோகம்.

மீன லக்னம் ராசி - பூர்வீக சொத்துகள், தந்தை வழியில் சொல்லாற்றல் மூலம் அதிர்ஷ்டம்.

மீதமுள்ள மிதுனம், கன்னி, கும்ப லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பலத்தை வைத்து யோகங்கள் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில்   பிறந்தாலும் செவ்வாய் நீச்சமாக 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்க வேண்டும்.  அதேபோல 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேராமலும் இருக்க  வேண்டும்.

செவ்வாயும் திருமணமும்
செவ்வாய்க்கும் திருமணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. செவ்வாய் தோஷம் என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும்.  செவ்வாய்  தோஷம் பற்றி அச்சப்படும்படி பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டாலும் அவை வெறும் வதந்திகள்தான்.

பழமையான ஜோதிட நூல்களில் செவ்வாய்  தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம் ஆகும். இப்படி  தோஷம் உள்ள ஜாதகத்தை அதேபோன்று தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்க்க வேண்டும். ஏதேனும் பரிகாரம்  செய்து தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக முற்றிலும் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் சேர்க்கக்கூடாது.

செவ்வாயும் நல்ல நாளே
கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். செவ்வாய் கிரகத்துக்கு உரிய நாள், செவ்வாய்க் கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய்  என்ற  சொல்லுக்கே மங்களம் என்றுதான் பொருள். கோயில்களில் முக்கிய பரிகார பூஜைகளை செவ்வாய்க் கிழமையில்தான் செய்வார்கள்.  ஆகையால் செவ்வாய்க்  கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட  பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு நாம்  செவ்வாய்க்கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ  சாதாரணமாக நடக்கின்றன.

அவர்கள் செவ்வாயை “மங்கள்வார்” என்று குறிப்பிடுகின்றனர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை  விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர்.  செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன.

இந்த  நாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம்.  இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.  சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம்.  வேலையில் சேரலாம். பூமி பூஜை போடலாம். வீடு மாறலாம். புது வீட்டில்  பால் காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத  நிலைமைக்குக்கூட வாய்ப்புண்டு. இந்த நாளில் முருகன்  கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும், வினையும் நம்மை எதுவும் செய்யாது.செவ்வாய்க்  கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து  நின்று பலன் தரும்.

வழிபாடு - பரிகாரம்
செவ்வாய்க்குரிய கடவுள் முருகப்பெருமான். எல்லா முருகன் தலங்களும் செவ்வாய் பரிகாரத் தலங்களே. அறுபடை வீடுகளுக்கு சென்று முரு கப்பெருமானை  வணங்குவதால் செவ்வாயால் உண்டாகும் பிரச்னைகள் விலகும். பழநியில் தண்டாயுதபாணி செவ்வாயாகவே அருள்பாலிக்கிறார். மயிலாடுதுறை அருகே  உள்ள வைத்தீஸ்வரன் கோயில், முக்கிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், பின்பும் இங்கு வந்து வழிபடுவது  சிறப்பாகும்.

நவகிரக திருப்பதிகளில் திருக்கோளூர் செவ்வாய் தலமாகும். இத்தலத்தில் உள்ள பெருமாளை  தரிசிப்பதால் சொத்துப் பிரச்னைகள் தீரும்.
தினமும் கந்த  சஷ்டி கவசம், கந்தகுரு கவசம், திருப்புகழ், முருகன் துதி பாடல்களை பாடி முருகனையும், செவ்வாய் எனப்படும் அங்காரகனையும் வணங்கி வழிபட்டால் புத்திர  யோகம், பூமி பாக்யம் முதலான சகல யோகங்களும் வளங்களும் பெருகும்.

நன்றி: ஜோதிட முரசு - மிதுனம் செல்வம்

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் சனீஸ்வரர்

E-mail Print PDF

நம் வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இவை இரண்டையும் இரு கண்கள் என்றே கூறலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி வரும் நாள், நட்சத்திர, திதிகளை அனுசரித்தே ஒவ்வொரு விஷயமும், விசேஷமும் மேற்கொள்ளப்படுகின்றன. நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் நவகிரகங்களின் அனுக்கிரகமே முக்கியமாக இருக்கிறது. நவகிரகங்களில் பிரசித்தி பெற்றதும், பிரதானமாக இருப்பதும் சனியாகும். இவர் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யத்தை தருபவராக திகழ்கிறார்.

ஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன், மந்திரி, தொழிலதிபர், அன்றாடங்காய்ச்சி என எல்லோரும் இவருக்கு சமமானவர்களே. அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைக்கு ஏற்ப சிறிதும் பாரபட்சம் இன்றி பலாபலன்களை அருள்கிறார் கடவுளர்களை கூட இவர் விட்டு வைக்கவில்லை. நல்ல ஆரோக்யத்துடனும், செல்வச் செழிப்புடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை.

இந்த மூன்றையும் அருள்பவர் சனீஸ்வர பகவான். தடைகளை அகற்றி வளமான வாழ்வை அளிப்பவர். நீண்ட ஆயுள், உயர்ந்த பதவி, நிறைந்த சொத்து, ஆள்பலம் ஆகிய அனைத்து செல்வங்களையும் தரக்கூடியவர். பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானைச் சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைகூட மிகப்பெரிய பட்டம் பதவி என்று அமர வைத்துவிடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜ தந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். இவர் 12 ராசிகளை சுற்றி வர சுமார் 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார்.

இந்த 30 ஆண்டுகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஒரு ஜாதகருக்கு ஏற்படுத்துகிறார். ஆகையால்தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தவன் இல்லை, 30 ஆண்டுகள் தாழ்ந்தவன் இல்லை என்ற ஜோதிட வாக்கு ஏற்பட்டது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு ஜாதகத்தில் தசா புக்தி சரியில்லாமலும், சனி பார்வை சரி இல்லாமலும் இருந்து கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும்.

அதே நேரத்தில் சனியால் யோக பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றலும் அவருக்கு உண்டு. ஆகையால்தான் "சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை
, சனியைப்போல் கெடுப்பவனும் இல்லை," "சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்" என்ற ஜோதிட சொற்றொடர்களும் ஏற்பட்டன.

சாக்கடையில் பதுங்கிய இந்திரன்
ஒருசமயம் தேவேந்திரன், சனி பகவானிடம் சென்று நான் தேவர்களுக் கெல்லாம் தலைவன். என்னை நீ எப்படி பிடிக்கலாம் என்று கேட்டார். அதற்கு சனிபகவான் ‘‘நான் நீதிமான், எல்லோரையும் சமமாக பாவித்துத்தான் கிரக பரிபாலனம் செய்து வருகிறேன். என் பார்வையில் இருந்து எவரும் தப்ப முடியாது,’’ என விளக்கம் தந்தார். ‘‘அப்படியென்றால் நீ என்னை பிடிக்கும் நேரத்தையாவது சொல்லி விடு,’’ என்று தேவேந்திரன் வேண்டினான். சனீஸ்வரரும் அந்த காலத்தை தெரிவித்தார்.

சனீஸ்வரர் குறிப்பிட்ட அந்த நேரம் வந்ததும் தேவேந்திரன் பெருச்சாளி உருக்கொண்டு சாக்கடையில் போய் ஒளிந்துகொண்டார். சனி குறிப்பிட்ட கால நேரம் கடந்தபிறகு சாக்கடையில் இருந்து வெளியே வந்த தேவேந்திரன் சனீஸ்வரரிடம் சென்று "உங்கள் பார்வையிலிருந்து தப்பி விட்டேன் பார்த்தீர்களா?" என்று பெருமையடித்துக் கொண்டார். அதற்கு சனீஸ்வரர் சிரித்துக்கொண்டே, "நீங்கள் சிம்மாசனத்தை விட்டு, சாக்கடையில் சென்று உழன்றீர்களே அதுகூட என் பார்வை  பீடிப்பினால்தான்" என்றார். இதன்மூலம் சனீஸ்வரர் ஓர் சமத்துவ நாயகன் என்பதை அறிய முடிகிறது.

சனியின் கோச்சார பலன்
எல்லா கிரகங்களுக்கும் ஜாதகத்தில் தசா, புக்தி, அந்தரம் என்று உண்டு. கோச்சார கிரக பெயர்ச்சியும் உண்டு. ஆனால், சனிக்கு கோச்சார கிரக பெயர்ச்சி பலம் அதிகம். காரணம் இவர் ஒரு ராசியில் சுமார் இண்டரை வருடங்கள் தங்கி இருந்து பலன் தருவார். ஒரு ஜாதகத்தில் 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் வந்து செல்லும்போது ஏழரைச் சனி என்ற அமைப்பை ஏற்படுத்துகிறார். அதேபோல் ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கு வரும்போது அர்த்தாஷ்டம சனியாக பலன் தருகிறார். ராசிக்கு ஏழாம் வீட்டில் வரும்போது கண்ட சனியாகவும், எட்டாம் வீட்டிற்கு வரும்போது அஷ்டம சனியாகவும் பலன்களை தருகிறார்.

நமக்கு குடும்பத்தில் கஷ்ட, நஷ்டங்கள், உடல்நலக் குறைவு, விபத்துகள், வியாபாரத்தில், தொழிலில் கடன், நஷ்டம், ஏற்பட்டாலும் அலுவலகத்தில் ஏதாவது பிரச்னை, இடமாற்றம் போன்றவை நடந்தாலும், வீட்டில் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமல், படிக்காமல் விஷமத்தனங்கள் செய்தாலும், "உன்னை ஏழரை சனி பிடித்து ஆட்டுகிறது" என்று சொல்லி திட்டுவார்கள். மாறாக உன்னை சூரியன் பிடித்து ஆட்டுகிறான். உனக்கு கேது பிடித்து இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை. ஜாதகத்தில் எந்த கிரக தசாபுக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனீஸ்வரரின் தலைதான் உருளும். இதில் சிறிதளவும் உண்மை கிடையாது. எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை, யோகம், அதிர்ஷ்டம், கஷ்ட-நஷ்டங்களைத் தருகின்ற தன்மை, அதிகாரம் எல்லாம் உண்டு. ஆனால், சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் பொதுவாக பரவலாக நம்மிடையே தவறாக ஏற்பட்டு  விட்டது.

ஏழரைச் சனியில் சுபம்
சனி, தசா காலத்திலோ, சனியின் கோச்சார நிலையிலோ, பல்வேறு விதமான யோகங்களை வாரி வழங்குவார். சனியால் வருகின்ற ஏற்றம், யோகம், அசுர வளர்ச்சியாகும். அரசியலில் மிகப்பெரிய பதவிகளையும், பொறுப்புக்களையும் கொடுப்பதில் சனிக்கு நிகர் சனியே. ஏழரைச்  சனியில் விரைய சனி நடைபெறும் காலத்தில் சொத்து வாங்கும் யோகத்தை தருவார். அதேபோல் மகன், மகள் திருமணத்தை சுபமாக நடத்திக் கொடுப்பார். வராத பணம் கடன்கள் எல்லாம் வசூலாகும். கூடவே சில அநாவசிய செலவுகளும் இருக்கும்.

நான்கில் சனி வரும்போது அலைச்சல், இடமாற்றம், சுக குறைவு இருந்தாலும் பூர்வீக சொத்துகளை அடைவதில் ஏற்பட்ட தடைகளை நிவர்த்தி செய்வார். விரும்பிய இடமாற்றம் உண்டாகும். சொந்த வீட்டில் பால் காய்ச்சும் பாக்யம் கிடைக்கும். அவரவர் கொடுப்பனைக்கேற்ப வாகன யோகத்தை தருவார். எட்டாம் இடமான அஷ்டமத்தில் சனி வரும்போது செலவுகள் கூடும் என்றாலும் அது கூடுமானவரை அவசிய, சுப செலவுகளாகவே இருக்கும். அதேசமயம் மருத்துவச் செலவுகளும் இருக்கும். குடும்ப சொத்துகள், பாகப்பிரிவினை சுபமாக நடக்கும். சாதக, பாதகங்கள், நிறை, குறைகள் இணைந்ததுதான் கிரக பலன்களாகும்.

ஜெனன லக்னத்திற்கு இரண்டாம் இடமான தனம், வாக்குஸ்தானத்தில் சனி இருந்தால் அவரை ”கரிநாக்கு” என்று சொல்வார்கள். இவர்கள் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு சக்தி அதிகம். இவர்களுக்கு வாக்கு பலிதம் இருக்கும். அதேநேரத்தில் கையில் காசு, பணம் தங்காது. கையில் இருந்தால் செலவு ஆகிக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு பிரிந்து அயல் நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பார்கள். ஜாதக கட்டத்தில் சனிக்கும், சந்திரனுக்கும் உள்ள தொடர்பால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது.

ஒரே ராசியில் சனி-சந்திரன் இருப்பது சமசப்தமமாக பார்ப்பது. சனி நட்சத்திரத்தில் சந்திரன், சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது இந்த புனர்பூ தோஷ அமைப்பாகும். இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு முயற்சி செய்யாமலேயே திடீரென்று திருமணம் கூடி வந்துவிடும். மளமளவென்று எல்லா ஏற்பாடுகளும் தாமாகவே நடக்கும். இது ஒருவகை. இன்னொரு வகை எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது தடை வரும். நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை நிச்சயமற்ற சூழ்நிலைகள் உண்டாகும். சிலருக்கு திருமண தேதிகூட மாறலாம்.

வழிபாடு - பரிகாரம்
மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள், முதியோர்கள், ஆதரவற்றோர், கடின உழைப்பாளிகள், தொழிலாளிகள், பாரம் சுமப்போர், துப்புரவுத் தொழிலாளிகள், தொழு நோயாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் தொண்டும், உதவியும், சனீஸ்வரருக்கு மிகவும் பிரீதியானதாகும். சனி ஸ்தலமான திருநள்ளாறு சென்று வழிபட்டு அன்னதானம் செய்யலாம்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவதிருப்பதிகளில் பெருங்குளம் சனி பரிகார ஸ்தலமாகும். சனிக்கிழமை  வரும் பிரதோஷ  தினத்தில் சிவனுக்கு வில்வத் தளங்களால் மாலை சாற்றி வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் எற்றி, 8 சிதறு தேங்காய் உடைத்து வழிபடலாம். ஏழைகளுக்கு குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் தரலாம். இல்லாதோர், இயலாதோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு இரும்பு சட்டி வாங்கித் தரலாம். சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நாட்களில் அன்னதானம், வஸ்திர தானம் செய்வது சிறப்பு.

நன்றி: ஜோதிட முரசு- மிதுனம் செல்வம்

வைகுண்ட ஏகாதசி விரதமும் சுவர்க வாசல் தரிசனமும் - 08.01.2017 வீடியோ இணைப்பு

E-mail Print PDF

Image may contain: indoor

மார்கழி மாதத்தில் சிவபெருமானை வழிபடும் திருவாதிரை (ஆதிரை) திருநாளும்; விஷ்ணு பகவானைக் வழிபடும் ஏகாதசித் திருநாளும், ஆஞ்சநேயர் ஜெயந்தியும், விநாயக சஷ்டியும் மார்கழி மாதம் சிறப்புப் பெறுகின்றது.

வைணவர்கள் மட்டுமின்றி  இந்துக்கள்  எல்லோருமே விரதம் இருக்கும் நாள் வைகுண்ட ஏகாதசியாகும். விபரம் தெரியாதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி நாள் அன்று விரதம் இருப்பதோடு உறங்காமல் கண் விழிக்கவும் செய்வார்கள். அந்த நன்னாளில் அதிகாலை வேளையில் ஆலயங்களில் சொர்க்க வாசல் திறக்கப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினத்தில்  பெருமாளை வணங்குபவர்கள் ”சொர்க்கத்தை” அடைவர் என்பது ஐதீகம். இவ்வாறு பக்தி சிந்தனைக்கு உரிய உயரிய மாதமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது.

மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களைப் பொறுத்த வரை  ஒரு நாளாக அமைகின்றது. அந்த வகையில் கணக்கிட்டால்  நமக்கு ஒரு மாதம் என்பது தேவர்களுக்கு 2 மணி நேரம் மட்டுமே. (1 மாதத்திற்கு 2 மணி  நேரம் வீதம் 12 மாதத்திற்கு 24 மணி நேரம் = 1 நாள்) இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வருகின்ற ஆறு மாத  காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிறது. இந்தக் காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம்  வரை வருகின்ற ஆறு மாத காலம்  தேவர்களுக்கு இரவுப் பொழுதாக அமைகிறது. இதை தட்சிணாயணம் என்று சொல்கிறோம். இந்த தட் சிணாயணத்தின் நிறைவுப் பகுதி - அதாவது, தேவர்களைப்  பொறுத்தவரை இரவுப் பொழுது நிறைவடையும் காலமான அதிகாலை 4 மணி  முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம் என்று பொருள்   கொள்ளலாம்.

மார்கழி மாதத்தின் தேவ இருட்டுப் பொழுதில் அதாவது உஷாக் காலம் எனும் அதிகாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரையுள்ள பிரம்ம முகூர்த்தம் என்ற கால அளவில் வைகுண்ட வாசல் திறக்கப்படுகின்றது.

ஒவ்வொரு மாதமும் சுக்கில பட்ச (வளர்பிறையிலும்), கிருஷ்ணபட்ச (தேய்பிறையிலும்) ஏகாதசி திதி வந்தாலும், மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்குத்தான் ”வைகுண்ட ஏகாதசி” என்ற தனி மகிமை உண்டு. இத் திருநாள் இவ் வருடம் 08.1.2017 ல் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது

வைகுண்ட ஏகாதசி அன்று வெங்கடேசர், கோவிந்தன், நாராயணன், கிருஷ்ணன், வரதராஜன் என்று நாம் வணங்கும் பரந்தாமன் வைகுண்டத்திலிருந்து சொர்க்க வாசல் வழியாக இலட்சுமி தேவியுடன் வந்து எமக்கு கருணை மழை பொழிகின்றார் என்று வேத புராணங்களில் சொல்லப்பெற்றுள்ளன.

மாதங்களில் நான் மார்கழி ஆகின்றேன் என்று ஸ்ரீ கிருஷ்ணபகவான் கூறியுள்ளார். ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறந்த முறையிலே நடைபெற்று வருகின்றது. இதே போன்று பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் ஏனைய வைஷ்ணவ கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றன. இதுவே சுவர்க்க வாசல் என்றும் பெரிய ஏகாதசி என்றும் முக்கோட்டி ஏகாதசி என்றும் அழைக்கப் பெறுகின்றது. சாதாரணமாக ஏகாதசி விரதமே சிறப்பாகப் பேசப்படும் போது மற்றவற்றைக் கடைப்பிடிக்கா விட்டாலும் சிறப்புமிக்க வைகுண்ட ஏகாதசி விரதத்தையாவது கடைப்பிடித்தால் நாராயணனின் நல்லருள் நமக்குக் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.

சொர்க்க வாசல் என்பதன் அர்த்தம்:
மார்கழித் திங்கள் உஷாக்காலத்தில் வைகுண்ட (ஆலய) வாசல்கள் திறந்தேயிருப்பினும்; பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் எமக்கு அருள் மழை சொரிய வருகின்றார். அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்பெறுகின்றது.

தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது.

விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்” என வரம் அளித்து அச் சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார்.

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந் நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து  ஐஸ்வரியங்களையும் பெற்று வாழலாம்.

வைகுண்ட ஏகாதசி திருமால் திருத்தலங்களில் கொண்டாடப்படுவதற்கு கூறப்பெறும் இன்னுமொரு காரணம்
ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் நான்முகனைப் படைத்தார். அந்த நான்முகனை அழிக்க மது, கைடபன் என்னும் இரண்டு அசுரர்கள் தோன்றினர்.

அவர்களைத் தடுத்த திருமாலிடமே அவர்கள் சண்டைக்கு வந்ததால் திருமால் அவர்களை அழித்தார். பின்னர் நல்லறிவு பெற்ற அவர்கள் திருமாலிடம் “நாங்கள் தங்கள் அருளால் சித்தியடைந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாஸம் செய்ய வேண்டும்” என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசி அன்று விண்ணகரத்தின் வடக்கு நுழைவாயிலைத் திறந்தார்.

அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள்; மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சுவர்க்க வாசல் திருநாளை பூவுலகில் சிறந்த திருவிழாவாக அனைவரும் அனுஷ்டிக்க வேண்டும். அன்று திருக்கோவில்களில் சுவர்க்கவாசல் வழியே எழுந்தருளும் அர்ச்சாவதாரப் பெருமாளை (விக்ரஹம்) தரிசிப்பவர்கள் அனைவரும் மோக்ஷம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.

அதன்படியே நடக்கும் எனத் திருமாலும், அசுரர்களுக்கு ஆசி வழங்கினார். அந்த நன்னாளே வைகுண்ட ஏகாதசித் திருநாளாக திருமால் உறையும் திருத்தலங்களில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

ஏகாதசி விரத முறை:
ஏகாதசியின் முந்தைய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால், பழம் மட்டும் உண்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். அடுத்த நாள் ஏகாதசியன்று அதிகாலை துயிலெழுந்து நீராடி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை கோயிலுக்குச் சென்று பரந்தாமன் – லக்ஷ்மி தேவியுடன் வருவதைப் போற்றி வணங்க வேண்டும்.

முழுவதுமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு பூராவும் கண் விழித்து இறை நாமம் கூறி மறுநாள் துவாதசி திதியில் பொழுது விடிவதற்கு முன் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாகச் சேர்க்கக் கூடாது.

துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக் கீரை, சுண்டைக்காய் மூன்றையும் அல்லது நெல்லிக்காயை மட்டுமாவது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏகாதசி அன்று பிறக்கும் குழந்தைகள் எல்லா ஆற்றலும் படைத்த சூரர்களாக விளங்குவார்கள். பொறுமை, இன்சொல், நுண்அறிவு, சாந்தம் எனும் அனைத்து நற்குணங்களுடன் இருப்பார்கள்.

மூதாதையர்களின் தவறால் அவர்கள் பெற்ற சாபத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டையையும் நாம் ஏகாதசி விரதம் கடைப்பிடித்து இறந்த பெரியவர்களுக்கு விரதத்தைக் தானமாக தந்தால் (நரகத்தில் அவர்கள் வேதனைப் பட்டுக் கொண்டிருந்தால் நம்மை வாழ்த்த அவர்களால் முடியாமல் போய்விடும்) அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பரந்தாமனிடம் நம்குலம் எப்பொழுதும் நன்றாக இருக்க விண்ணப்பிப்பார்கள் அவர்களுக்கு நற்கதி நிச்சயம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே  விளக்கேற்றி வைத்தால் மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிடைத்து மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். சீதேவி வீட்டினில் குடிகொள்ளும் போது எமக்கு கஷ்டமும் துன்பமும் தந்து வருத்தும் மூதேவி வெளியேறுவாள் என்பது ஐதீகம்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை ‘மார்க்கசிர’  என்று  வடமொழியிலும் மார்கழி என்று தமிழிலும் அழைக்கிறோம். இந்த மிருகசீரிஷ நட்சத்திரம் ம்ருகண்டு மகரிஷிக்கு உரியது. ஜோதிடப்  பிதாமகராகத் திகழ்பவர்  ம்ருகண்டு மகரிஷி. இவரது ‘ம்ருகண்டு சூத்ரம்’ மற்றும் ‘ம்ருகண்டு வாக்கியம்’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே  அந்நாளில் பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. என்றும் சிரஞ்சீவியாக விளங்கும் மார்க்கண்டேயரின் தந்தை இந்த ம்ருகண்டு மகரிஷி என்பதும் மார்க்கண்டேயரின்  ஜென்ம  நட்சத்திரம் மிருகசீரிஷம் என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை.

சப்த சிரஞ்சீவிகள் என்றழைக்கப்படும் அஸ்வத்தாமர், மகாபலி, வியாஸர், ஹனுமான், க்ருபாசார்யர், பரசுராமர், விபீஷணர் ஆகிய ஏழு பேருக்கு  அடுத்தபடியாக  நேரடியாக சிரஞ்சீவிப் பட்டத்தைப் பெற்றவர் மார்க்கண்டேயர்.

தனது உயரிய பக்தியின் மூலமாக மரணத்தை வென்ற மகாயோகி  அவர். மார்கழி மாதத்திற்கு  உரிய நட்சத்திரமான மிருகசீரிஷத்தில் உதித்த அந்த இளம் ஞானி தனது 16வது வயதில் மரணம் நிச்சயம் என்பதை  உணர்ந்தும் இவ்வுலக சுகங்களை  நாடாமல் இறைவனை மட்டுமே சிந்தையில் கொண்டிருந்தார்.

தனது அபரிமிதமான பக்தியினால் சிவலிங்கத்தைக்  கட்டித் தழுவியிருந்த அவரைக் கொண்டு  செல்ல நினைத்த எமதர்மனை சிவபெருமான் வதைத்த கதை நாம் அறிந்ததே. மார்க்கண்டேய சரித்திரம்  மரணத்தை வெல்லும் மார்கழி என்று இந்த மாதத்தின்  பெருமையை நமக்கு உணர்த்துகிறது. எனவேதான் ”ம்ருத்யுஞ்ஜய ஹோமம்” செய்ய விவரம் அறிந்தவர்கள் மார்கழி  மாதத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

அரங்கநாதனையே மணாளனாக அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டாள் விரதமிருந்த மாதம் இது. அவரது உயரிய பக்தியின்  காரணமாகத்தான்  அவரால் ஆண்டவன் அடி சேர முடிந்தது.  அதே போன்று ராம நாம ஜபத் தினையே தனது உயிராகக் கொண்டிருக்கும் ஆஞ் சநேயர் பிறந்ததும் மார்கழி மாத  அமாவாசை நாளில். மார்கழி மாதத்தில் வரும் வளர் பிறை ஏகாதசித் திருநாளை வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடுகிறோம்.

நாமும் வைகுண்ட ஏகாதசியில் நோன்பிருந்து சுவர்க்க வாயில் திறக்கும் போது வைகுண்டத்தில் இருந்து சுவர்க்க வாயில் வழியாக வருகை தரும் பரந்தாமனையும் இலட்சுமி தேவியையும் வழிபட்டு சகல ஐஸ்வரியங்களும் பெற்று இன்புற்று வாழ்வோமாக.

திருப்பதி மலை வாசனை தரிசிக்க இங்கே அழுத்துக

 

பொன்னாலை வரதராஜ பெருமாளை தரிசிக்க இங்கே அழுத்துக



ஓம் நமோ நாராயணா

 

 

 

3639.05.01.2017

 


2566.20.12.2015

2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு - பிறந்த நட்சத்திரங்களுக்கான பலன்கள்

E-mail Print PDF


அசுவதி, பரணி, கார்த்திகை 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

ஏப்ரல் மாதத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்!
மகத்தான சாதனை புரிந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் மேஷ ராசி நேயர்களே!

நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த புத்தாண்டு பிறக்கப் போகி றது. கேதுவின் ஆதிக்கத்தில் பிறக் கும் இந்தப் புத்தாண்டு உங்களுக்கு கீர்த்தியையும், செல்வத்தையும் அள்ளி வழங்கும் விதத்தில் கிரக நிலைகளைக் கொண்டிருக்கிறது. ஞானகாரகன் கேது உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். தன சப்தமாதிபதி சுக்ரனும் வக்ரம் பெற்றிருக்கிறார். 9,12–க்கு அதிபதியான குருவும் வக்ரம் பெற்றிருக்கிறார். உச்ச சனியின் பார்வையும் உங்கள் ராசியில் பதிகிறது.

இத்தனைக்கும் மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டு எண்ணற்ற மாற்றங்களை உங்களுக்கு கொடுக்கப் போகிறது.
திசாபுத்தியும், கிரகங்களும் பலம்பெற்றிருந்தால் உங்களுக்குப் பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக இருப்பவர்கள் உதவி செய்வார்கள். இணைந்து வரும் எதிர்ப்புகள் எல்லையை விட்டு ஓடும். மணந்து கொண்ட

வாழ்க்கைத் துணையால் மறுமலர்ச்சி உண்டாகும். துணிந்து நீங்கள் செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளலாம். இல்லையேல் பணிந்து வணங்கி பரிகாரங்களை செய்து கொள்வது நல்லது.
2014–ம் ஆண்டு கேதுவிற்குரிய ‘7’ எண் ஆதிக்கத்தில் அமைவதால், உங்கள் சுய ஜாதகத்தில் கேதுவின் பலம் மற்றும் ராசிநாதன் செவ்வாய், தனாதிபதி சுக்ரனின் பலம் ஆகியவற்றை எடைபோட்டுப் பார்த்து சுயஜாதகத்தில் பாக்கியாதிபதி நிலையறிந்து அதற்குரிய ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தேக நலம் சிறப்பாக இருக்கும். செல்வ வளமும் அதிகரிக்கும்.

Read more...

Page 7 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்