Thursday, Jan 18th

Last update08:36:41 PM GMT

You are here: சைவமும் தமிழும்

"தைப் பொங்கல்" திருநாளும் யாழ்ப்பாண தமிழர் பண்பாடும் - பொங்கல் நிகழ்வுகள் விளக்கங்களுடன்

E-mail Print PDF

தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும். இவ் நிகழ்வானது இவ் வருடம் ஜனவரிமாதம் 15ம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக; தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.

இவ் விழா சங்க காலத்தில்;  வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும் (வெய்யிலையும்), காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்கைக்கும் (பூமி, சூரியன், வழிமண்டலம், நீர் நிலைகள் போன்றவற்றிற்கும்) தம்மோடு சேர்ந்து கஷ்டப்பட்டு உழைத்த கால்நடைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாக உழவர்களால் கொண்டாடப்பெற்று வந்துள்ளது.

தற்பொழுது உழவர்கள் மட்டுமன்றி வேறு பல தொழில்புரியும் எல்லா தமிழ் மக்களும் தம் மூதாதையினரான உழவர்கள் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த பண்டிகையாகவும், தமக்கு வேண்டிய உணவுப் பொருட்களை (அரிசி, தானியங்கள், மரக்கறி) போன்றவற்றை உற்பத்தி செய்து தரும் ”உழவர்களுக்கு நன்றி கூறும்” நாளாகவும்  கொண்டாடுகின்றார்கள். அதன் காரணமாக இப் பண்டிகை "உழவர் பண்டிகை" என்னும் பெயர் மழுங்கி ”தமிழர் பண்டிகையாக” பொங்கியெழுந்துள்ளது.

பொங்கல் விழாவானது முன்போல் வீடுகளில் மட்டுமன்றி; ஆலயங்கள், கல்விக் கூடங்கள், தொழில் நிலையங்களிலும், இந்துக்கள் அல்லாத தமிழ் மக்களாலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பெற்று வருவதனால் தமிழர் பண்டிகையாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப் பெற்று சிறப்படைகின்றது. அத்துடன் தமிழர்களின் நற்பண்புகளான விருந்தோம்பல், நன்றி கூறுதல், எல்லோருக்கும் மதிப்பளித்தல் போன்ற நற்பண்புகளை பிரதிபலிக்கும் ஒரு உன்னத திருநாளாகவும் அமைகின்றது.

உழவர்கள் இயற்கையின் உதவியால் ஆடி/ஆவணி மாதங்களில் நெல் விதைத்து, பயிராக்கி, நீர் பாச்சி அவை மிருகங்களினால் அழிந்து போகாது பேணிக் காத்து, பராமரித்து அறுவடைசெய்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் விழா என்றும் கூறலாம்.

சூரிய பகவான் ஒரு வருடத்தின் கால நிலையை வரையறுத்து மழை வீழ்ச்சியையும், பயிர்கள் வளர்வதற்கு தேவையான சாதகமான கால நிலையையும் ஏற்படுத்தி கொடுப்பதனால் உலகில் மானிடர்கள் மட்டுமன்றி ஏனைய உயிரினங்களும் உயிர் வாழ்வதற்கு ஓர் உயர் கொடுக்கும் சக்தியாக இருந்து வருகிறார்.

சூரிய பகவான் தனது சூரிய சக்தியை வெளிப்படுத்தாமல் இருந்தால் நாம் வாழும் உலகம் மட்டுமல்ல சூரிய மண்டலத்தை சூழ்ந்துள்ள எல்லா கிரகங்களும் ஐஸ் கட்டிகளாக உறைந்துவிடுமென விஞ்ஞானிகள் ஆதாரபூர்வமாக கூறுகின்றார்கள். எனவே, உலகில் வாழ்ந்து கெண்டிருக்கும் மானிடப் பிறவிகளான நாம் சூரிய பகவானை துதித்து வழிபடவேண்டிய நிலையில் இருக்கின்றோம். சூரிய பகவானின் அனுக்கிரகத்தினால் தான் உலகில் பயிர்கள் செழித்து வளர்ந்து எமக்குதேவையான உணவை பெற்றுக் கொடுக்கின்றன. அதன் காரணமாகவே “பூமியிலே மாரியெல்லாம் சூரியனாலே பயிர் பூப்பதுவும் காய்ப்பதுவும் மாரியினாலே” என கவிஞர் மருதகாசி சிறப்பித்துள்ளார்.

மனித நாகரிகம் நைல் நதிக்கரையில் தோன்றிய காலம் தொட்டு நதிகளும், நீர்த்தேக்கங்களும் மக்களின் உணவு உற்பத்திக்கு இன்றியமையாத பணியை ஆற்றி வருகின்றன. நதிகளில் இருந்தும், நீர்த்தேக்கங்களில் இருந்தும் நீரைப் பயன்படுத்திய விவசாய பெருங்குடி மக்கள் தங்கள் விளைச்சல் நிலங்களை பொன் விளையும் பூமிகளாக மாற்றுகின்றார்கள்.

Read more...

துர்க்காதேவி போற்றி

E-mail Print PDF

துர்க்காதேவி போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் அபிராமியே போற்றி
ஓம் ஆயிரங்கண்கள் உடையவளே போற்றி

ஓம் அம்பிகையே போற்றி
ஓம் ஆசைகளை அறுப்பாய் போற்றி
ஓம் அன்பின் உருவே போற்றி
ஓம் ஆபத்தைத் தடுப்பாய் போற்றி

ஓம் அச்சம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆனந்தம் அளிப்பாய் போற்றி
ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஆற்றல் தருவாய் போற்றி

ஓம் இமயவல்லியே போற்றி
ஓம் இல்லறம் காப்பாய் போற்றி
ஓம் இரு சுடர் ஒளியே போற்றி
ஓம் இருளை நீக்குவாய் போற்றி

ஓம் ஈசனின் பாதியே போற்றி
ஓம் ஈஸ்வரியே போற்றி
ஓம் உமையவளே போற்றி
ஓம் உளைமான் கொண்டாய் போற்றி

ஓம் உள்ளரவம் தீர்ப்பாய் போற்றி
ஓம் உற்சாகம் அளிப்பாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கம் அளிப்பாய் போற்றி

ஓம் என் துணை இருப்பாய் போற்றி
ஓம் ஏக்கம் தீர்ப்பாய் போற்றி
ஓம் எம்பிராட்டியே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பாய் போற்றி

ஓம் ஐமுகன் துணையே போற்றி
ஓம் ஐயுறு தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒளிர்வு முகத்தளவே போற்றி
ஓம் ஓச்சம் அளிப்பாய் போற்றி

ஓம் கங்காணியே போற்றி
ஓம் காமாட்சியே போற்றி
ஓம் கடாட்சம் அளிப்பாய் போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கற்பூர நாயகியே போற்றி
ஓம் கற்பிற்கரசியே போற்றி
ஓம் காம கலா ரூபிணியே போற்றி

ஓம் கிரிசையே போற்றி
ஓம் கிலியைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் கீர்த்தியைத் தருவாய் போற்றி
ஓம் கூர்மதி தருவாய் போற்றி

ஓம் குவலயம் ஆள்பவளே போற்றி
ஓம் குலத்தைக் காப்பாய் போற்றி
ஓம் குமரனின் தாயே போற்றி
ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி

ஓம் கொற்றவையே போற்றி
ஓம் கொடுந்துயர் தீர்ப்பாய் போற்றி
ஓம் கோமதியே போற்றி
ஓம் கோன்ரிவாகனம் கொண்டாய் போற்றி

ஓம் சங்கரியே போற்றி
ஓம் சாமுண்டேஸ்வரியே போற்றி
ஓம் சந்தோஷம் அளிப்பாய் போற்றி
ஓம் சாந்த மனம் தருவாய் போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சாபம் களைவாய் போற்றி
ஓம் சிம்ம வாகனமே போற்றி
ஓம் சீலம் தருவாய் போற்றி

ஓம் சிறு நகை புரியவளே போற்றி
ஓம் சிக்கலைத் தீர்ப்பாய் போற்றி
ஓம் சுந்தர வடிவழகியே போற்றி
ஓம் சுபிட்சம் அளிப்பாய் போற்றி

ஓம் செங்கதி ஒளியே போற்றி
ஓம் சேவடி பணிகிறேன் போற்றி
ஓம் சோமியே போற்றி
ஓம் சோதனை தீர்ப்பாய் போற்றி

ஓம் தண்கதிர் முகத்தவளே போற்றி
ஓம் தாயே நீயே போற்றி
ஓம் திருவருள் புரிபவளே போற்றி
ஓம் தீங்கினை ஒளிப்பாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திரிசூலம் கொண்டாய் போற்றி
ஓம் திசையெட்டும் புகழ் கொண்டாய் போற்றி
ஓம் தீரம் அளிப்பாய் போற்றி

ஓம் துர்க்கையே ! அம்மையே போற்றி
ஓம் துன்பத்தை வேரறுப்பாய் போற்றி
ஓம் துணிவினைத் தருவாய் போற்றி
ஓம் தூயமனம் தருவாய் போற்றி

ஓம் நாராயணியே போற்றி
ஓம் நலங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் நிந்தனை ஒழிப்பாய் போற்றி
ஓம் பகவதியே போற்றி

ஓம் பவானியே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாக்கியம் தருவாய் போற்றி
ஓம் பிரபஞ்சம் ஆள்பவளே போற்றி

ஓம் பிழை தீர்ப்பாய் போற்றி
ஓம் புகழினை அளிப்பாய் போற்றி
ஓம் பூஜிக்கிறேன் துர்க்கா போற்றி
ஓம் பொன்னொளி முகத்தவளே போற்றி

ஓம் போர்மடத்தை அளிப்பாய் போற்றி
ஓம் மகிஷாசூரமர்த்தினியே போற்றி
ஓம் மாதாங்கியே போற்றி
ஓம் மலைமகளே போற்றி

ஓம் மகாமாயி தாயே போற்றி
ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி
ஓம் தவன் தங்கையே போற்றி
ஓம் மனக்குறை தீர்ப்பாய் போற்றி

ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் வேதவல்லியே போற்றி
ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி

ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் ஜெயஜெய தேவியே போற்றி
ஓம் ஜெயங்கள் அளிப்பாய் போற்றி
ஓம் துர்க்காதேவியே போற்றி

மதுரை மீனாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் அடியார்கள் தோத்திரம் செய்வதற்காக எழுதப் பெற்றிருக்கும்
அன்னையின் புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்களை நாமும் பாடி  இஷ்ட சித்திகளைப் பெற்றுய்வோமாக.

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி
ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
ஓம் அருமறையின் வரம்பே போற்றி
ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
ஓம் அரசிளங்குமரியே போற்றி
ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
ஓம் அமுதநாயகியே போற்றி
ஓம் அருந்தவநாயகியே போற்றி
ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி        10

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
ஓம் ஆதியின் பாதியே போற்றி
ஓம் ஆலால சுந்தரியே போற்றி
ஓம் ஆனந்த வல்லியே போற்றி
ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
ஓம் இமயத்தரசியே போற்றி
ஓம் இடபத்தோன் துணையே போற்றி
ஓம் ஈசுவரியே போற்றி
ஓம் உயிர் ஓவியமே போற்றி
ஓம் உலகம்மையே போற்றி        20.

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி
ஓம் ஏகன் துணையே போற்றி
ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
ஓம் ஒப்பிலா அமுதே போற்றி
ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி
ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி
ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி    30.

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
ஓம் கனகமணிக்குன்றே போற்றி
ஓம் கற்பின் அரசியே போற்றி
ஓம் கருணை ஊற்றே போற்றி
ஓம் கல்விக்கு வித்தே போற்றி
ஓம் கனகாம்பிகையே போற்றி
ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி
ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி    40.

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி
ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
ஓம் சக்தி வடிவே போற்றி
ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி    50.

ஓம் சிவயோக நாயகியே போற்றி
ஓம் சிவானந்தவல்லியே போற்றி
ஓம் சிங்காரவல்லியே போற்றி
ஓம் செந்தமிழ் தாயே போற்றி
ஓம் செல்வத்துக்கரசியே போற்றி
ஓம் சேனைத்தலைவியே போற்றி
ஓம் சொக்கர் நாயகியே போற்றி
ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி
ஓம் ஞானாம்பிகையே போற்றி
ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி    60.

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி
ஓம் திருவுடையம்மையே போற்றி
ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி
ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
ஓம் திருநிலை நாயகியே போற்றி
ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
ஓம் தென்னவன் செல்வியே போற்றி
ஓம் தேன்மொழி அம்மையே போற்றி    70.

ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் நற்கனியின் சுவையே போற்றி
ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
ஓம் நல்ல நாயகியே போற்றி
ஓம் நீலாம்பிகையே போற்றி
ஓம் நீதிக்கரசியே போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பழமறையின் குருந்தே போற்றி
ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி    80.

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி
ஓம் பார்வதி அம்மையே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பெரிய நாயகியே போற்றி
ஓம் பொன்மயில் அம்மையே போற்றி
ஓம் பொற்கொடி அன்னையே போற்றி    90.

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மழலைக்கிளியே போற்றி
ஓம் மனோன்மணித் தாயே போற்றி
ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
ஓம் மாயோன் தங்கையே போற்றி
ஓம் மாணிக்கவல்லியே போற்றி
ஓம் மீனவர்கோன் மகளே போற்றி
ஓம் மீனாட்சி அம்மையே போற்றி
ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி    100.

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி
ஓம் வடிவழகு அம்மையே போற்றி
ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி
ஓம் வேதநாயகியே போற்றி
ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி    108.
சுபம்

2014 ம் ஆண்டு - 12 இராசிகளுக்கும் பொதுப் பலன்கள் - நட்சத்திர பலன்கள் இணைப்பு

E-mail Print PDF


12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக.

மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….)

மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள்.

வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். இதுவரை கல்வியில் பின் தங்கியிருந்த பிள்ளைகள் இனி நன்றாகப் படிப்பார்கள். உங்கள் மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும்.

உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானமான 9ம் வீட்டில் இந்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகளுக்கு புதிய கோணத்தில் தீர்வு காண்பீர்கள். இதுவரை தடைபட்டிருந்த காரியங்கள் இனி அதிவேகமாக முடியும். தோல்வி மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கரைந்து கொண்டிருக்கிறதே என்கிற வருத்தம் நீங்கும் அளவுக்கு இனி சம்பாதிப்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைத்து அதன் மூலம் சில முன்னேற்றங்கள் இருக்கும். உங்கள் குடும்பத்திற்குள் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் யாவும் விலகும்.

உங்களின் பரம்பரைச் சொத்து நியாயமான முறையில் உங்களுக்கு வந்து சேரும். மேலும், தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதனான செவ்வாய் 6ம் வீட்டில் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மன உளைச்சல்கள் முற்றிலும் நீங்கும். நீங்கள் பேசும் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். உங்களின் உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. கடன்களையெல்லாம் பைசல் செய்வீர்கள்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டு பிறகு காலதாமதாக தள்ளிப்போய் முடியும். கடுமையான பணிச்சுமை இருக்கும். ஆனால், 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 4ம் வீட்டிலேயே அமர்வதால் எப்படியாவது இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும்.

என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை  சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தை வழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்துச் செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்ப்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும்.

4.2.2014 முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல்  14.10.2014 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாய் பலவீனமாவதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், உடன்பிறந்தவர்கள் மற்றும்  உறவினர்களுடன் மனக்கசப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 20.6.2014 வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் தலைச்சுற்றல், தூக்கமின்மை, செரிமானக் கோளாறு, மன இறுக்கம் வந்து செல்லும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு பிரச்னைகளெல்லாம் வந்து நீங்கும்.

21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு கேது விலகி 12ம் வீட்டிலும், ராகு 6ம் வீட்டிலும் அமர்வதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற மனோ பயத்திலிருந்து வெளியே வருவீர்கள். எதையோ இழந்ததைப் போல் முகவாட்டத்துடன் காணப்பட்டீர்களே! இனி முகம் மலரும். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகைகளெல்லாம் கைக்கு வரும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். அவரின் ஆரோக்யம் சீராகும். திருமணத் தடைகள் நீங்கும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். நீங்கள் சொல்லாததையும் சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் விலகியிருந்த மனைவிவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். இந்தாண்டு முழுக்க சனி 7ல் நின்று கண்டகச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 8ல் அமர்ந்து அஷ்டமத்துச் சனியாகவும் வருவதால் கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிவுகளும் வரக்கூடும். மனைவிக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். மறதியால் விலை உயர்ந்த நகை, பணம், செல்போனை இழக்க நேரிடும்.

யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அநாவசியமாக மற்றவர்களின் விவகாரத்தில் தலையிட்டு நியாயம் பேசப்போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், நகச்சுத்தி, முடி உதிர்தல், அலர்ஜி வந்து நீங்கும். திடீரென்று அறிமுகமாகும் நபரை நம்பி வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம்.

வியாபாரிகளே! மற்றவர்களின் பேச்சை கேட்டு அனுபவமில்லாத தொழிலில் முதலீடு செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு செயல்படத் தொடங்குவீர்கள். பழைய வாடிக்கை யாளர்களும் தேடி வருவார்கள். ரகசியங்கள் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விளம்பரத்தையும் பயன்படுத்துங்கள். வர வேண்டிய பாக்கிகளை போராடித்தான் வசூலிக்க வேண்டி வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. துணி, சிமென்ட், செங்கல் சூளை வகைகளால் லாபமடைவீர்கள். சந்தை நிலவரங்கள் அறிந்து புது ஏஜென்சி எடுங்கள். பங்குதாரர்களால் பிரச்னைகள் வெடிக்கும்.

உத்யோகஸ்தர்களே! கடுமையாக உழைக்க வேண்டிய காலகட்டம் இது. நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் வெற்றியை உறுதி செய்யலாம். ஆனாலும், உங்கள் உழைப்பை பயன்படுத்தி சிலர் முன்னேறுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சம்பள உயர்விற்காக போராட வேண்டி வரும்.

கன்னிப்பெண்களே! தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதிய நண்பர்களின் நட்பால் உற்சாகம் உண்டு. காதல் எண்ணத்தை தள்ளி வைத்து விட்டு உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கல்யாணம் தாமதமாகி முடியும். பெற்றோரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். மாணவர்களே! கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். விரும்பியப் பாடப்பிரிவில் கூடுதல் செலவு செய்தும், சிலரின் சிபாரிசின் பேரிலும் சேர வேண்டிய சூழ்நிலை உருவாகும். கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பை தவிர்க்கப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! தலைமையின் கவனத்தைப் பெறுவீர்கள். தலைமையிடம் சிலர் உங்களைப் பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள்.

கலைத்துறையினரே! கிடைக்கின்ற சாதாரண வாய்ப்பையும் வீணாக்காது தக்க வைத்துக் கொள்ளுங்கள். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். இந்த 2014ம் ஆண்டு போராட்டமாக இருந்தாலும் உங்கள் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:
மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள ஆனந்ததாண்டவபுரம் தலத்தில் அருளும் பஞ்சவடீஸ்வரரையும், கல்யாண சுந்தரி, பெரியநாயகியையும் தரிசித்து வணங்கி வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.

Read more...

ஆத்ம இயல்பும் அதன் விளக்கமும்

E-mail Print PDF


ஆத்ம இயல்பு முன்னுரை
ஆத்ம இயல்பு நிலைக்காக நாம் செய்யும் ஆத்ம யாத்திரைக்கு அழைத்துச் செல்லும் இந்நூல், ஒரு வழிகாட்டும் பலகையாக அமைந்துள்ளது.

நம்முடைய ஆத்மா பல பிறப்புகளின் இறுதியில் மனிதப்பிறப்பு கிடைத்துள்ளது. இந்த அரிய மனிதப் பிறப்பில் சிந்திக்கும் திறன் உள்ளது. ஆனாலும் நாம் இயல்பைப் பற்றிய மெய்ச் சிந்தனையின்றி இருக்கின்றோம். நம்முடைய இயல்புணர்வை அறியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். நமது ஆத்ம இயல்பு மாயையால் முழுவதும் உணரமுடியாமல் மறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆத்ம யாத்திரையில் நமக்குள்ளேயே இருக்கின்றது என அறியும் வழி கிடைக்கின்றது.

இயற்கையில் எல்லையற்ற சக்தியுள்ளது. ஒருவர் அதை உணரும் திறத்தைப் பொறுத்தே வெளிப்படுகிறது. இதன் போக்கை உணர்ந்தவர்களே தங்கள் வாழ்வையும், நாட்டின் வாழ்க்கையும் காப்பாற்றுகிறார்கள்.

சன்னியாசத்தை மேற்கொள்ளாமல் எந்த முறையிலும் மேன்மையான யோக நிலைகளை அடைய முடியாது என்பது இயற்கைக்கு மாறுபட்ட கருத்தாகும். இல்லற வாழ்க்கையிலேயே முதலிருந்து கடைசிவரை இருந்துக் கொண்டு ஆத்ம உச்சநிலையின் சாதனைகளை அடைய முடியும்.

இயற்கையின் அந்த இயல்பான ஓட்டத்தில் லயத்தில் இணைந்து விடுவது நல்லது. இது இயல்பு நிலைக்கு அழைத்துச் செல்லும், வழிகாட்டும் எத்தனை நுட்பமான உண்மை இது.

இந்தச் செய்திகளின் ஓர் சாரம்.

“படித்து விளக்கம் பெறுவோம்”.

“நம் இயல்புணர்வு மூலம் உணர்ந்து நமது இயல்பை அறிவோம்’’.

“ஆத்ம இயல்பு நிலையை அறிந்து அனுபவித்து விளக்கம் பெற்றுக் கொண்டே இருப்போம்.

Read more...

திருவெம்பாவை - மார்கழி நோன்பு - மார்கழி தோச்சல் விரத மகிமையும் அதன் சிறப்பும் - திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாடல்கள் இணைப்பு

E-mail Print PDF

maarkali

திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை அன்று  நிறைவு செய்வார்கள். வைணவ சமயத்தவர்கள் மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருந்து வணங்குகின்றார்கள். இவ்விரதம் எதிர்வரும் 23.12.2017 அன்று ஆராம்பமாவதாக சோதிடம் கணிக்கின்றது.

Read more...

திருக்கார்த்திகை தீபம் - விளக்கீடு - 02.12.2017 - கிரிவலம் செய்வதன் பலன்கள் வீடியோ இணைப்பு

E-mail Print PDF

திருச்சிற்றம்பலம்

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நன்நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 02.12.2017 சனிக்கிழமை அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

Read more...

Page 8 of 30

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்