Sunday, Mar 18th

Last update09:00:34 AM GMT

தலைப்புச் செய்திகள்:
You are here: சிறுவர் பூங்கா

சிரிக்க சிந்திக்க - நான் ஏன் பரிட்சையில் முட்டை வாங்கினேன்?

E-mail Print PDF


1. கேள்வி: மாவீரன் நெப்போலியன் எந்த போரில் இறந்தார்?
பதில்: அவரது கடைசி போரில்...

2. கேள்வி: நம் நாட்டின் சுதந்திர பிரகடனம் எங்கே கையெழுத்திடப்பட்டது?

பதில்: அந்த பக்கத்தில் கீழ் பகுதியில்.....

3. கேள்வி: ரவி ஆறு எந்த மாநிலத்தில் பாய்கிறது?

பதில்: திரவம்

4. கேள்வி: காலை உணவிற்கு நீ என்ன சாப்பிட முடியாது?

பதில்: மதிய உணவு மற்றும் இரவு உணவு.

5. கேள்வி: பாதி வெட்டப்பட்ட ஆப்பிளில் நீ பார்ப்பது என்ன?

பதில்: இன்னொரு பாதி?

6. கேள்வி: ஒரு சிவப்பு கல்லை நீ நீல நிற கடலில் எறிந்தால் அது என்ன ஆகும்?

பதில்: கல் ஈரமாகி விடும்.

7. கேள்வி: ஒரு மனிதன் எப்படி எட்டு நாட்கள் (eight days) வரை தூங்காமல் இருக்க முடியும்?

பதில்: பிரச்சனை இல்லையே, அதான் நைட் தூங்குவாரே.

8. கேள்வி: ஒரு கையால் யானையை எப்படி தூக்க முடியும்?

பதில்: ஒரு கை தான் என யானைக்கு தெரியாதே.

9. கேள்வி: ஒரு கையில் மூன்று ஆரஞ்சும், நான்கு ஆப்பிள்களும், இன்னொரு கையில் நான்கு ஆரஞ்சும், மூன்று ஆப்பிள்களும் உள்ளன. உனக்கு எது வேண்டும்?

பதில்: அதை விட பெரிய கைகள் வேண்டும்.

10. கேள்வி: ஒரு சுவரை எட்டு ஆட்கள் சேர்ந்து பத்து மணிநேரத்தில் கட்டி முடிக்கிறார்கள். ஆனால் அதே சுவரை நான்கு ஆட்கள் சேர்ந்து கட்டி முடிக்க எத்தனை மணிநேரம் ஆகும்?

பதில்: அந்த சுவர் தான் ஏற்கனவே கட்டியாச்சே.

11. கேள்வி: விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: திருமணம் தான்.

12. கேள்வி: தோல்விக்கு முக்கிய காரணம் என்ன?

பதில்: தேர்வு தான்.

பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு!

E-mail Print PDF


தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்

பொது அறிவுக் கணக்கு

E-mail Print PDF


ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி நான்கு விரல் கீழே சறுக்கி இறங்கிவிடும்.

இதனை வேறு விதமாக கூறுவதாயின்; ஒரு பனை மரத்தில் ஏற முற்படும் ஓணான் ஒன்று ஒரு மணித்தியாலத்தில் ஒரு சாண் ஏறி 1/3 சாண் கீழே சறுக்கி இறங்கிவிடும்

இவ்வாறு ஏறும் ஓணான் எத்தனை மணித்தியாலங்களில் 32 முழம் உயரமான பனை மரத்தில் ஏறி முடிக்கும் ?

12 விரல் = 1 சாண்
24 விரல் = 1 முழம்
2 சாண் = 1 முழம்

நற்பண்புகள் அற்ற திறமைகள் பூச்சியமாகும் - எப்படி?

E-mail Print PDF

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்பது ஔவையின் முது மொழி. எழுத்துகள் இல்லாத மொழிகள் கூட உலகில் இருக்கின்றன. ஆனால் எண்கள் இல்லாமல் கணிதமே இல்லை. கணிதம் இல்லையென்றால் வர்த்தகம் இல்லை; தொழில் இல்லை; பொருளாதாரம் இல்லை; ஏன், உலக இயக்கமே இல்லை. எண்களைப் பற்றி சற்று எண்ணிப்பார்ப்போம். கணித ரீதியாக அல்ல உள ரீதியாக.

மூல எண்கள் மொத்தம் பத்துதான். 1,2,3,4,5,6,7,8,9,0. 1 முதல் 9 வரை உள்ள எண்களுக்கு, அவைகளுக்கென்று ஏதோ ஒரு மதிப்பு இருக்கிறது. ஆனால், பூஜ்யத்திற்கு என்று அடிப்படையாக  எந்த மதிப்பும் கிடையாது. வேறு எந்த எண்ணுடனாவது ஒட்டிக்கொண்டால் தான், அதுவும் அந்த எண்ணுக்குப் பின்னால் போய், அடக்க ஒடுக்கமாக நின்றால் தான் அதற்கு ஒரு கௌரவம் கிடைக்கிறது; உயிர் கிடைக்கிறது.

ஒரு மனிதனுக்கு எத்தனையோ திறமைகள் இருக்கலாம். அவையாவும் மனிதப் பண்போடு பின்னிப் பிணைந்து இருக்கும்போதுதான் அதற்கு பேரும், புகழும், சிறப்பும் கிடைக்கின்றது. இல்லையேல் அத்தனை திறமைக்கும் அடிப்படை மதிப்பு பூஜ்யம் தான். திகைக்காதீர்கள் மேலே படியுங்கள்.

நூற்றுக்கணக்கான திறமைகள் மனிதனிடம் இருக்கின்றன. பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, ஆடல் திறமை, பாடல் திறமை, கணினித் திறமை, மருத்துவத்திறமை, வாகனம் ஓட்டும் திறமை, இயந்திரங்களைப் பழுதுபார்க்கும் திறமை…..இப்படிப் பல.
அத்தனைக்கும் ஒரிஜினல் மதிப்பு பூஜ்யம் தான். சற்றுப் பொறுங்கள்.

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு திறமைகள் முக்கியம் தான். ஆனால் திறமைகள் மட்டுமே அவனை உயரத்தில் கொண்டு போய் உட்கார வைத்து விடாது. அப்படியே வைத்தாலும், அந்த உயரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு அவனிடம் நல்ல பண்புகள் இருந்தால் மட்டும்தான் முடியும்.

எப்படித் தெரியுமா?
வாழ்க்கைக்கு பணம் மிகவும் அவசியம். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிடாது எனபதைப் போலத்தான் இதுவும்.

மனிதனிடம் இருக்க வேண்டிய சில நல்ல பண்புகளைப் பார்ப்போம்.
1. இன்சொல்
2. நேர்மை
3. பரோபகாரம்
4. சொல் தவறாமை
5. அடக்கம்,
6. நன்றி
7. பிறர் மனைவியைத் தீண்டாமை
8. கோபம் கொள்ளாமை
9. ஒழுக்கம்.
இந்த ஒன்பது பண்புகளுக்கும் முறையே 1,2,3,4,5,6,7,8,9 என்று வரிசையாக ஒரு மதிப்புக் கொடுப்போம். சரி.

சில மனிதர்களைப் பார்ப்போம்.

ஒரு மனிதன் அவனிடம் இன்சொல் என்பது சுத்தமாக இல்லை. யாரிடமும் எடுத்தெறிந்து பேசுகிறான். எப்போதுமே, எதற்குமே கடுமையான வார்த்தைகளையோ, தரம் குறைந்த வார்த்தைகளையோ சர்வ சாதாரணமாகப் பேசுவதே அவனது வழக்கம். அவனிடம் ஒரு திறமை, இசைத்திறமை இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.

எந்த சபாவினர், விரும்பி அவனை பாடுவதற்குக் கூப்பிடுவார்கள்? வேறு யாருமே கிடைக்காத போது, வேண்டாவெறுப்பாகத் தானே அவனைக் கூப்பிடுவார்கள்? கடைசி வாய்ப்புத்தானே அவனுக்கு? ஆக இங்கே அவனுடைய திறமையின் மதிப்பு பூஜ்யம். பூஜ்யம் எப்படி வளரும்?

இன்னொருவன் மின்சார சாதனங்களைப் பழுது பார்ப்பதில் திறமையுள்ளவன். ஆனால் சொல்தவறாமை என்ற பண்பு சுத்தமாகக் கிடையாது. சொன்ன நேரத்திற்கு வரமாட்டான். வந்தால், சொன்ன நேரத்துக்கு முடிக்கமாட்டான். வளரமுடியுமா இவனால்?

இன்னொருவன் பைக், ஸ்கூட்டர் பழுது பார்ப்பதில் கெட்டிக்காரன். ஆனால் நேர்மை கிடையாது. பெட்ரோல் திருடுவான். நல்ல பாகங்களை மாற்றிவிடுவான். இவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுத்து, வண்டிகளைக் கொண்டு வந்தவர்கள், தானாக, நாளாக, வேறு மெக்கானிக்குகளைத் தேடிப் போய் விட்டார்கள். என்றால்……இவன் எப்படி வளர்வான்?

இன்னொருவன், மருத்துவம் பார்ப்பதில் மகாதிறமைசாலி…. இவனிடம், பிறன் மனைவி நாடாமை என்ற பண்பு கிடையவே கிடையாது. என்ன பிரயோஜனம்? ஏதோ வளர்ந்தான்.
வளர்ந்த வேகத்திலேயே தேய்ந்தான். இப்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறான்.

ஆக, முன்னேற்றம் என்பது திறமைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. அதுபோல பூஜ்யங்கள் மட்டுமே கணிதம் அல்ல.

பண்புகள் தான் நிஜமான முன்னேற்றத்திற்கு நிச்சயமான தேவை. 1,2,3,.. என்ற எண்களால் தான் கணிதத்திற்காக முழுமை கிடைக்கிறது. என்பதைப் போல.
ஒருவனிடம், இன்சொல், நேர்மை, சொல் தவறாமை என்ற எல்லாப் பண்புகளும் இருந்து தொழில் திறமை, நிர்வாகத்திறமை என்று இரண்டு திறமைகளும் இருந்து விட்டால், அவனுடைய மதிப்பு, மேலே சுட்டிக் காட்டியபடி, 12400 ரூபாய் (அல்லது) டாலர் என்று வைத்துக் கொள்ளலாம்.

அந்த மூன்று பண்புகளும் இல்லாமல் இருந்து, அந்த இரண்டு திறமைகள் மட்டும் அவனிடம் இருந்தால், அவனுடைய மதிப்பு இரண்டு பூஜ்யங்கள் மட்டும்தான்.

இங்கே ஒரு சந்தேகம் வரவேண்டுமே?
மேற்சொன்ன அதே மனிதனிடம், அடக்கம் என்ற நல்ல பண்பு இல்லாமல், ஆணவம் என்ற தீய பண்பு இருந்து விட்டால்…..? அவனுடைய மதிப்பு இப்போது என்ன?
124000 x 0 இப்படி! இதன் மதிப்பு என்ன? பூஜ்யம்தான்.

ஆமாம் சில நல்ல பண்புகள் இருந்தாலும், அவைகளுக்கு எல்லாம் எதிராகச் செயல்படும் வகையில் ஒரு தீய பண்பு இருந்து விட்டாம் போதும் அழிவு நிச்சயம்.

வாழ்க்கை என்ற மரம் செழித்து வளர வேண்டுமானால், திறமைகள் என்ற நில வளங்களோடு, அதனை பராமரித்து வளர்க்கும் பண்பும் இல்லை யென்றால், மரம் வளராது என்பது மட்டுமல்ல, பட்டுப்போகவும் வாய்ப்புகள் உண்டு.நேர்மை உயர்வு தரும்

E-mail Print PDF

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.

ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

Page 6 of 18

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்