Saturday, Jan 19th

Last update09:19:58 PM GMT

You are here: வாழ்த்துக்கள்

18ம் ஆண்டு நினைவு அஞ்சலி - ”டாக்குத்தர்” என அழைக்கப் பெற்ற உயர்திரு. நாகேசு பரம்சோதி அவர்கள் - காலையடி - 06.03.2014

E-mail Print PDF


காலையடி பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகேசு பரம்சோதி அவர்களின் 18ஆவது நினைவை ஒட்டி அன்னாரின் நினைவுகளில் சில ... ...

எமது மண்ணின் மைந்தர்கள் வரிசையில் அடுத்து நிறைந்து நிற்பவர் அமரர் நாகேசு பரம்சோதி அவர்கள் . "டாக்குத்தர்" என எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டவர் அமரர் நா. பரம்சோதி அவர்கள். அவர் ஒரு பயிற்றப்பெற்ற ஆண் தாதியாக யாழ்ப்பாணம் அரச மருத்துவ மனையில் சேவையாற்றியவர். ஆனால் சேவைகள் செய்வதில் ஓரு “டாக்ரருக்கு” ஒப்பானவர்.  நான் இங்கு அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிக் கூற வரவில்லை. ஆனாலும் அவர்கள் தம் வாழ்வில் அரைவாசிக் காலத்தை எம் மக்களுக்காக சேவை ஆற்றினார் என்பதை மட்டும் கூற விரும்புகிறேன் .

எமது கிராமத்தில் வைத்தியத் துறையில் முதன்முதல் கடமை ஆற்றியவர் அமரர் பரம்சோதி அவர்களே என நினைக்கிறேன். கிராமத்தில் நெருக்கடியான வேளைகளிலெல்லாம் வீடு தேடி வந்து தம்மால் முடிந்த உதவிகளைச் செய்வார். குளுக்கோஸ் ஏற்றல், இரத்தப் பரிசோதனை சலப்பரிசோதனை ,மற்றும் ஆபத்தான வேளைகளில் அதற்க்கான முதலுதவிகள் செய்தல் என்பன அவரின் அளப்பரிய சேவைகளாகும் .வைத்தியசாலைக்குச் சென்றால் அங்கு தம் கடமையில்  கண்ணாக இருப்பார் .

அப்போதுகூட எம் ஊரவரைக் கண்டால் ஓடிவந்து விசாரிப்பார் .உதவி தேவை என்றால் உடனடியாகவே செய்து கொடுப்பார். அன்னாரின் உதவி மனப்பான்மையை ஒருமுறை நேரில் அனுபவித்தவன் நான். 1972 என நினைக்கிறேன் எமது கிராம வயல்களெல்லாம் தோட்டங்கள் நிறைந்த (அப்போதைய பணப்பயிர் )பசுந்தரைகளாக இருந்த காலம் .தோட்டத்துக்கு கிருமி நாசினி அடிக்கும் போது மயக்கம் ஏற்பட்டு பலர் மடிந்தகாலம் .எனது நண்பன் ஒருவர் மருந்தடித்து வீடுவந்தபின்  மாலை ஆறு மணியளவில் மயக்கமுற்றார் .அவர்களின் வீட்டில் வேறு ஆட்கள் அப்போது இல்லாத படியால் நான் தனியாகவே காரில் ஏற்றி பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றேன். அவசர சிகிச்சைப் பிரிவில் நான் நிற்கும்போது அவ்விடத்திற்கு தற்செயலாக (கடமை முடிந்து வீடு செல்வதற்காக)அமரர் பரம்சோதி அவர்கள் வந்தார்கள். எனக்கு அவரைத் தெரியுமே ஒழிய பழகியது கிடையாது. அவரைக் கண்டதும் ஓடிச் சென்று அவரிடம் உதவி கேட்டேன்.

உடனடியாக  ஆகவேண்டிய அனைத்தையும் செய்து வாட்வரை கொண்டுவந்து சேர்த்தார் 'தாம் வீடு செல்வதையும் விட்டு என்னுடன் சில மணித்தியாலம் நின்றபின் தமது கடமை அறையில் இருப்பதாகவும் தேவைப்படின் வரும்படியும் கூறி இடத்தையும் காட்டிச் சென்றார் .இதுவரை அவருக்கு நான்யார் ?நோயாளி யார் ?என்பது கூடத் தெரியாது .ஊரவன் என்பது மட்டுமே தெரிந்திருந்தது .

பின்னர் வீட்டிலிருந்து ஆட்கள் வந்தபோதுதான் அவருக்கு யார்யாரென தெரியவந்தது .அதன்பின் நான் அவரிடம் பல முறை உதவிகள் பெற்றேன் .இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் என்னைப் போலவே எல்லோரையும் நேசித்தவர் என்பதற்காகவே .
இன்னுமொரு சுவையான சம்பவம்;

ஒருமுறை வாட்டில் இருந்த ஒரு பெண் நோயாளி இறந்துவிட்டதாக பிரேத அறையில் சேர்க்கப் பட்டார் .இறந்தவரின் உறவினர் புலம்பிக்கொண்டு அவரின் உடலைப் பார்க்க அமரர் அவர்களின்  உதவியை நாட அவரும் அவர்மேல் இரங்கி அவரை திருட்டுத் தனமாக அழைத்துச் செல்ல எண்ணி  தான் முதலில் பார்த்துவரச் சென்றாராம் .அப்போது இறந்தவரின் உதடு அசைவதைக் கண்டு மிகத் துணிவுடன் அவரை அவசரப் பிரிவுக்கு அனுப்பியிருக்கிறது. இப்ப பார்க்க முடியாது எனக் கூறி  உடனடியாக யாருக்கும் தெரியாது டாக்டருக்கு அறிவித்து அவரை வாட்டுக்கு அனுப்பி அடுத்தவர்  எவரும் அறியாதவாறு அவரைக் காப்பாற்றி ஒரு பிரச்சனையும் ஏற்படாது வைத்தியர்களின் நல் மதிப்பைப் பெற்றது பரமரகசியம் .இதை அவர் வெளியில் சொல்ல முடியாத ரகசியமாகவே  சிலருக்குக் கூறியுள்ளார் .

1994 இல் தமிழினத்தின் சாபக்கேட்டால் நாம் யாழ்குடாவை விட்டு இடம் பெயர்ந்தபோது ஊரில்  விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே இருந்தனர் .அக்காலத்தில் அமரரும் அவர்களுடன் தங்கி விட்டார் .வைத்திய வசதிகள் எதுவுமற்ற அவ்வேளையில் இங்கு கைவிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்று தேவைக் கேற்ப மருந்துவகைகளைப் பெற்றுக் கொண்டுவந்து பயன் படுத்தி தமது திறமையால் பலரின் நோயைக் குணப் படுத்தியதை இங்கிருந்தவர்கள் பெருமையுடன் கூறக் கேட்டுள்ளோம்.

ஆனால் அவரிடம் இருந்த ஒரு பழக்கம் "அவர் ஒரு மதுப்பிரியர் ".இதுவே அவரது இறுதியை முடிவு செய்திருக்கலாம் .நாம் இடம் பெயர்ந்து இருந்த வேளைஊரில் உள்ளவர்களைக் காப்பாற்றிய அந்த உத்தமர் அக்காலத்திலேயே 6.3.1996ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டு நீங்கினார் .இன்று அவர் விட்ட இடத்திற்கு ஆள் இல்லாதாது எமக்கு ஏற்ப்பட்ட சாபக் கேடே .

குறிப்பு ;
அமரர் அவர்கள் பற்றி என் அறிவுக்கு எட்டியதையே எழுதியுள்ளேன் .இதில் ஏதாவது தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்குகும்படியும் இன்னும் அவரின் சேவைகள் இருந்தால் அதை கருத்துப் பிரிவில் குறித்து அன்னாரை நினைவு கூறும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

நன்றி .
ஆ .த.குணத்திலகம்
ஒய்வுபெற்ற ஆசிரியர்
அகில இலங்கை சமாதான நீதிவான்


70 வது பிறந்தநாள் வாழ்த்து - கந்தையா பரமானந்தம் அவர்கள்

E-mail Print PDF

தனது 70 வது பிறந்த நாளை குடும்ப உறவுகளுடனும், உற்றார், உறவினர், நண்பர்களுடனும் 15.02.2014 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடிய கந்தையா பரமானந்தம் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.

பிறந்தநாள் நிகழ்வுகள் பார்வையிட இங்கே அழுத்துக

நன்றி: சபா தனு அவர்கள்

எல்லோரும் எல்லாமும் பெறும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக 2014 மலரட்டும் - பணிப்புலம்.கொம்

E-mail Print PDF

புத்தாண்டே புத்தாண்டே வருக, வருக  - பாடல் கேட்க இங்கே அழுத்துங்கள்

நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை கீழே பதிவிலிட்டு பரிமாறிக் கொள்ளலாம்

நன்றி

”அம்மா” (அன்னையர்) தின வாழ்த்துகள் -

E-mail Print PDF

கண் கண்ட அன்புத் தெய்வத்திற்கு எமது நல்வாழ்த்துக்கள்

பணிப்புலம்.கொம்

பத்து மாதம் சுமந்திருந்து பெற்று, பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்து,  நாளெல்லாம் பட்டினியாய் தான் இருந்தாலும், ஒரு கணமேனும் நம் பசி பொறுக்காது உணவூட்டி;  மேனிஎல்லாம் இளைத்திடப் பாடுபட்டே எம்மை வித்தகனாய் கல்வி பெற வைத்து, மேதினியில் மேன்மையாய் நாம் வாழ நல்லறிவு புகட்டிய அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா?

அன்னையர் தினம் என்பது வருடத்தில் ஒருநாள் (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) இவ் வருஷம் 13.05.2018 அன்று தமது அன்னையரை சந்தித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும் நாளாக மேல்நாட்டவர்கள் கொண்டாடும் ஒரு கொண்டாட்டமாகும்.

தனது உணவில் ஒரு பகுதியை கருவிலிருக்குபோது 10 மாதங்களாக ஊட்டி வளர்த்து, குழந்தையாக பிரசவித்த பின்னர் தனது உதிரத்தையே பாலாக மாற்றி பருகத்தந்து வளர்த்தெடுப்பவளும். தன் அன்பு நிறைந்த இனிய மொழிகளால் உலகம் போற்றும் உத்தமர்களாக உருவாக்குபவளும் அன்னையே. உந்தியிலும், மடியினிலும், தோழிலினிலும் சுமந்து உணவூட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தெடுத்த அந்த அன்புத் தெய்வத்தை ஆதரித்து அன்பு செலுத்த ஒருநாள் போதுமா?

அதனால்போலும் கீழைத்தேய பாரம்பரியங்களுக்கு அமைய இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் அரபு நாடுகளின் மக்கள் தங்கள் அன்னையரை மிக உயர் நிலையில் வைத்து அன்புடன் கெளரவமாக, வாழ்நாள் பூராவும் பணிவிடை செய்து, நன்றிக்கடனை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக கீழைத்தேசதில் வாழும் தமிழர்களும் மற்றைய சமூகத்தினரும் தன்னை  பெற்று வளர்த்து, அறிவூட்டி இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய அன்னையை வயதான காலத்திலும் தம்முடனேயே வைத்திருந்து அவர்களுக்கு தினம் தினம் பணிவிடைகள் செய்து பராமரித்து பரிசில்கள் வழங்கி மகிழ்விக்கும்போது "அன்னையர் தினம்" என ஒருநாள் தேவையே இல்லை எனலாம்.

இக்கால கட்டத்திலும்; வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் தம் வாழ்வில் எல்லா நாளையும் அன்னையர் தினமாகவே மதித்து அன்னையை மகிழ்விக்கின்றார்கள்.

அதனால்தான், அவர்கள் மேற்குலகம் கொண்டாடும்  அன்னையர் தினத்தை ”போற்றும் நாள்” ஆக பிள்ளைகள், உற்றார், உறவினர் எல்லோரும் ஒன்றுகூடி விழா எடுத்து அவர்களுக்கு பரிசில்கள் வழங்கி மகிழ்வூட்டி அவர்களின் ஆசீர்வாதம் பெறும் சிறப்பான நாளாகவே கொண்டாடுகிறார்கள்.

“தாயிற் சிறந்த கோயிலுமில்லை" என்ற வரிகள் தாய்மையின் “புனிதத்துவம்”, தாய்மையின் “பெருமை”, தாய்மையின் “தியாகம்” தாய்மையின் “கருணை உள்ளம்” போன்றவற்றை எடுத்துக் கூறத்தக்க வரிகளாகும். இந்த உலகில் தாய்க்கு ஈடாக ஒப்பிட எதுவுமே இல்லை என்பதனால் கோயிலாக ஒப்பிடுகிறார்கள் எனலாம். “அம்மா..” என்ற இன்சொல்லில் புதைந்துள்ள அர்த்தங்கள் ஆயிரமாயிரம். ஒருவர் தனது இன்பத்தின் போதும், துன்பத்தின்போதும் கூவி அழைக்கும் அன்புத் தெய்வமும் அம்மாவே.

ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக வீட்டிலுள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச்செல்லும் ஆசானாக இப்படி தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் “அன்னை” என்ற பாத்திரம்தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கின்றது. தாய்மை என்பது ஓர் உன்னதமான உணர்வு. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை மேற்குலக நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது

நாகரீகம் படைத்த மேற்குலக நாடுகளில் அன்னையர் தினம் அந்த குறிப்பிட்ட தினத்தில் மாத்திரமே மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வருடத்தில் 365 நாட்களும் மேற்கத்திய நாடுகளின் முதுமை நிலை அடைந்துள்ள அன்னையர் வயோதிப மடத்தில் அல்லது ஒரு பராமரிப்பு நிலையத்தில் தங்கள் வாழ்க்கையின் இறுதி நாட்களை ஓட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பராமரிப்பு செலவினத்தை மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்களே பொறுப்பேற்கின்றன. ஓரிரு அன்னையரின் பிள்ளைகளே தங்கள் செலவில் தங்களுடைய தாய்மாரை வசதியான கூடிய கட்டணம் அறவிடும் பராமரிப்பு நிலையங்களில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் கூட தங்களின் சகல வசதிகளையும் உடைய மாடமாளிகைகளில் தங்கள் அன்னையரை வைத்து பராமரிப்பதில்லை.

சில அன்னையரின் பிள்ளைகளே கிறிஸ்மஸ் தினம், புத்தாண்டு தினம், அன்னையரின் பிறந்த தினம் ஆகிய மூன்று நாட்களில் அன்னையரை சென்று சந்தித்து அவர்களுக்கு பரிசுகளை கொடுத்து விட்டு திரும்புவார்கள். பொதுவாக மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தங்கள் அன்னையரை அன்னையர் தினத்தில் மாத்திரமே போய் பார்த்து பூச்செண்டுகளையும், அன்பளிப்புகளையும் கொடுத்து அவர்களை மகிழ்விப்பார்கள். இது அன்னையர் மீது கொண்டுள்ள அன்பினால் அவர்கள் செய்வதில்லை. சம்பிரதாயத்தை கெளரவிக்கும் முகமாகவே இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்கள்.

உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் (Mother's Day) ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை. அன்னையர் தினம் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து,  இத்தாலி, துருக்கி, ஆஸ்ட்ரேலியா, மெக்சிகோ, கனடா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  வேறு சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.

"அன்னையர் தினம் " Mother's Day உலகெங்கும் கொண்டாடக் காரணமாக இருந்த பின்னணி பற்றி நாம் ஒரு சிறிய விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும். அன்னையர்களுக்கு மரியாதை செலுத்தும் சம்பிரதாயம் புராதன காலத்திலே தொடங்கி விட்டதாக வரலாற்று சான்றுகள் பகருகின்றன. பண்டைய கால மனிதர்களால் அன்னையர் புராணங்கள் கதையாக வழங்கப்பட்டு வந்தன. இதில் முக்கியமாக பெண் - கடவுளான சைபீல் என்ற கடவுள் வணங்கப்பட்டாள். இந்தப் பெண் தெய்வமே எல்லாக் கடவுளுக்கும், முழு முதல் தாய்க் கடவுளாக அம்மக்களினால் வணங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஒரு முறை இந்த முழுமுதல் தாய்க் கடவுளுக்கு பிரிஜியா மக்களால் விழா எடுக்கப்பட்டு வந்தது. இந்த விழாவே அன்னையர்களை மரியாதை செய்யும் முதல் விழா கொண்டாட்டமாகக் கருதப்படுகிறது.

வசந்த காலத்தின் துவக்கத்தை கிரேக்கர்கள் பல வகைகளில் கொண்டாடினர். அதில் தாய் தெய்வத்தை வணங்குவதும் ஒன்றாகும். கிரேக்கர்கள் தெய்வமாக வழிபட்டு வந்த க்ரோனஸின் மனைவி ரேஹாவைத்தான் அவர்கள் தாய் தெய்வமாக வழிபட்டனர்.

ரோமர்களும் வசந்த கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சைபெலி என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி வழிபட்டனர். இந்த வழிபாடு என்பது கலை நிகழ்ச்சிகள் விளையாட்டு வீர சாகசங்கள் என பல்வேறு விஷயங்கள் இடம்பெறுவதாக அமைந்தது. ரோமானியர்கள் தங்களது தாய்- கடவுளுக்கு பாலடைன் மலையில் கோயில் ஒன்றை எழுப்பினர். ஒவ்வொரு வருடமும் மார்ச் 15ம் தேதி மூன்று நாள் விழா நடத்தினர். விழாவின் போது இக்கடவுளுக்கு பலவிதமான படையல்களும் செய்யப்பட்டன.

கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்பு இந்தக் கொண்டாட்டம் மாதா திருக்கோயிலுக்கு மரியாதை செய்வதாக மாறியது. இயேசுபிரான் பாலையில் கழித்த 40 நாளை நோன்பு இருந்து கொண்டாடும் விழா- நாட்களில் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்கள் ஞானஸ்னானம் செய்விக்கப்பட்ட திருக்கோயில்களுக்கு பரிசுகள் கொண்டு வரும் விதமாக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டதாக கூறப்படுகின்றது. மத்திய காலத்தில் தனது தாயை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அன்பளிப்புகள் வழங்கி கௌரவித்ததாகவும் சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன..

இவ்வாறான நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நவீன காலத்தில் உலகளாவியரீதியில் அன்னையர் தினம் கொண்டாடுவதற்கான சந்தர்ப்பம் உருவான வரலாற்றின் பின்னணி பின்வருமாறு அமைந்திருந்தது.

"ஜார்விஸ்" என்ற பெண் சமூக சேவகி அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியா மாநிலத்தில் கிராப்டன் (GRAFTON) என்ற கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் யுத்த களத்தில் அமெரிக்க வீரர்கள் பலியாயினர். அவர்களின் குடும்பங்களும் சிதைந்து சீரழிந்து நாலாபக்கமும் சிதறிப்போயினர்.. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சமாதானத்திற்கும் தன் இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டு சமூக சேவகியாகவே வாழ்ந்து 1904ல் Jarvis மறைந்தார். இவரின் மகள் அனா ஜார்விஸ் Anna Jarvis முதன்முதலாக தனது அன்னையின் நினைவாக உள்ளூரில் உள்ள மெத்தடிஸ்ட் சர்ச்சில் 1908ம் ஆண்டு மே மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தினார். தனது அன்னையைப் பாராட்டி சீராட்டி அன்னையர் தினம் கொண்டாடிய முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார். சமூக நலனில் அக்கறை கொண்ட ஜார்விஸ் ஏதாவது ஒரு நாளையாவது எல்லோரும் தங்களது தாயை அவர் உயிரோடு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவளது தியாகத்தையும் தங்களுக்கு அவள் செய்த ஈடு இணையற்ற பணியையும் நினைத்து அவளை கெளரவிக்க வேண்டும் என்று விரும்பினார்.

இதைத் தொடர்ந்து அனா ஜார்விஸ் Anna Jarvis 1913ம் ஆண்டில் தன் பணி நிமித்தம் பென்சில்வேனியா மாநிலத்தில் பிலடெல்பியாவில் குடியேறினார். தாயார் விட்டுச்சென்ற சமூக சேவையை மகள் ஜார்விஸ் தன் தனிப்பெரும் கடமையாகக் கருதித் தொடர்ந்தார். கஷ்ட்டப்படுகிற, வாழ்க்கையில் இன்னலும், சோதனைகளும் ஒருசேரத் தாக்கி மனம் வெந்து, நொந்து சமூகத்தில் ஓரங்கட்டப் பட்டவர்களுக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தாயாரின் நினைவாகவும், தத்தம் வீடுகளில் அவரவர் அன்னையர்களும் கெளரவிக்கப் பட வேண்டும். எல்லோர் இல்லங்களிலும் அன்றையதினம் மகிழ்ச்சி ததும்ப வேண்டும் என்று எண்ணினார். தம் எண்ணத்தை பென்சில்வேனியா மாநில அரசுக்குத் தெரிவித்தார். அரசும் அவர் கருத்தை ஏற்று 1913ம் ஆண்டு முதல் அன்னையர் தினம் என அங்கீகரித்து அறிவித்தது.

மாநில அரசு அங்கீகரித்தாலும் அனா ஜார்விஸ் திருப்தி அடையவில்லை. ஆயிரக்கணக்கில் அரசியல்வாதிகளுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும், வர்த்தக அமைப்புகளுக்கும் கடிதங்கள் எழுதி அமெரிக்கா முழுவதும் "அன்னையர் தினம்" கொண்டாடவும் அந்நாளை அரசின் விடுமுறை நாளாகவும் அங்கீகரித்து அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதிக்கும் இதேவேண்டுகோளை விடுத்தார்.

இவரின் வேண்டுகோளையும், நியாயத்தன்மையையும் ஏற்றுக்கொண்ட அமெரிக்கா ஜனாதிபதி வுட்ரோ வில்சன் 1914ம் ஆண்டு வருடம்தோறும் மேமாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையை அதிகாரப்பூர்வமாக அன்னையர் தினமாகவும், அன்று விடுமுறை தினமாகவும் இருக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இவ்வறிவிப்பை அமெரிக்க காங்கிரசும் ஏற்றுக்கொண்டது. பின்பு கனடா அரசாங்கமும் ஏற்று அங்கீகரித்து அறிவித்தது. அதுமட்டுமல்ல 46 நாடுகள் இதே நாளில் "அன்னையர் தினம்" என அறிவித்து நடைமுறைப்படுத்தியது. தனது வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப் பட்டதையிட்டு ஜார்விஸ் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாலும் முழுமனநிறைவடையவில்லை. 46 நாடுகளில் மட்டுமல்ல உலகமெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் தொடர்ந்தும் ஈடுபட்டார்.

உலகம் முழுக்க "அன்னையர் தினம்" அனுசரிக்கப்படவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும் என்பதுதான் என் ஆசை என்று தனது 84வது வயதில் தனியார் மருத்துவமனையில் இறப்பதற்கு முன் தன்னைச் சந்தித்த நிருபர்களிடம் வெளிப்படுத்தினார். அவருடைய ஆசை இன்று அனேகமாக பூர்த்தியாகிவிட்டது என்றே சொல்லலாம்.

இன்று நாம் கொண்டாடும் அன்னையர் தினம் அன்னைகளுக்கெல்லாம் அன்னையாகத் திகழ்ந்த அனா ஜார்விஸ் என்பவரின் முயற்சியினாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதேநேரம், அனா ஜார்விஸ் திருமணமானவரோ பிள்ளைகளைப் பெற்றெடுத்தவரோ அல்ல. அன்னைகளுக்காக அரும்பாடுபட்டவர் என்பதே உண்மை.

அன்னையர் தினத்தில் எமது அன்னையை மட்டுமல்ல அன்னையர்களின் நாம் மதித்து மகிழ்விக்க வேண்டும். அவர்களுக்காகப் பிரார்த்தனைகளைப் புரிய வேண்டும். மானசீகமான எமது அன்பை வழங்க வேண்டும். அன்னையை மதிப்பது ஒருநாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதன்று. ஆனாலும், அன்னையர் தினம் என்று குறிக்கப்பட்ட தினத்தில் விசேட மதிப்பும், மகிழ்விப்பும் அன்னைக்கு வழங்கப்பட வேண்டும் எதிர்பார்க்கப்பட்டது.

எனவே, அன்னையர் தினம் என்பது ஒரு உயரிய தினம். அன்னையரை மகிழ்விக்க எமது சக்திக்கேற்றாற்போல் எதை செய்ய முடியுமோ அதை செய்வோம். ஏனெனில். அன்னையின் பெறுமானத்தை நாம் வழங்கும் அன்பினாலன்றி பணத்தினால் தீர்மானிக்க முடியாது. அன்னையர் தினம் என்பது உண்மையான அன்பிற்காகவும் தனது அன்னைக்கு நன்றி கூறும் விதத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்துப் போராடிய அனா ஜார்விஸின் உண்மையான நோக்கத்தை நாம் புரிந்து இத்தினத்தை கொண்டாடுவோம்.

”உழைப்பு கொண்டு வந்தால்தான் மனைவி மனைவியாக இருப்பாள்
ஆனால் உழைப்பு கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும் அம்மா அம்மாவாகவே இருப்பாள்”

அன்னையும் பிதாவும் பின்னடிக் இடைஞ்சல் - வாசிக்க இங்கே அழுத்துங்கள்6644.09.05.2016

தொழிலாளர் வர்க்கம் உயர்வு பெற்ற நன்நாள் - மே தினம் எனும் தொழிலாளர் தினம் - மே 1

E-mail Print PDF


பார் முழுதும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள்,..

காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து உழைக்கும் வர்க்கம் தங்களை விடுவித்துக்கொண்டு உயிர்த்தெழுந்த உன்னத நாளே மே 1 தொழிலாளர் தினம்….

Read more...

அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார்

E-mail Print PDF

அகிலம் போற்றும் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் பிறந்தது மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள காரைதீவு எனும் நெய்தலும் மருதமும் ஒருங்கே அமையப்பெற்ற பழந்தமிழ்க் கிராமத்திலாகும்.

சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினர் தவமிருந்து 1892-03-27 இல் அடிகளாரைப் பெற்றெடுத்தனர்.  அப்பகுதியில்தான் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயமும் உள்ளது. காரைதீவின் காத்தல் தெய்வமாம் பத்தினித்தெய்வம் கண்ணகியைக் குலதெய்வமாகவும், அவ்வம்மையின் நாமத்தைத் தாங்கியவருமாகிய கண்ணம்மையின் வயிற்றில் முதலாவது உதித்தவர் அடிகளார்.

இன்றும் கண்ணகை அம்மனாலயத்தைப் பரிபாலித்து வருகின்ற விஜயராஜன் குடியார் என்று சொல்லப்படுகின்ற வம்வத்தைச் சேர்ந்தவர். அவர் அக்காலத்தின் விதானையாக (பொலியானை - அக்கால பொலிஸ் தலைமைக்காரர்) இருந்தார்.

அடிகளார் இயற்பெயரான தம்பிப்பிள்ளை என்ற நாமத்தோடு பிறந்தார். அவர் நோய்வாய்ப்படவே கதிர்காமத்திற்குக் கொண்டு சென்று விரதம் அனுஷ்ட்டித்து நோய் குணமாகவே முருகப் பெருமானின் பெயரான ”மயில்வாகனன்” எனும் பெயரை அவருக்குப் பெற்றோர் சூட்டினர்

மட்டக்களப்பு மாநிலத்தில் வாராது வந்துதித்து உலகின் எட்டுத்திசைகளிலும் தமிழ் மொழியின் எழிலைப்பரப்பியவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள். முத்தமிழ் வித்தகரான அந்த முனிவரின் தமிழ்ப்பணிகள் பற்றி எத்தனை மணிநேரம் பேசினாலும் எடுத்தியம்ப இயலாது.

1898 இல் பள்ளியில் சேர்ந்தார். 1902-இல் மெதாடிஸ்ட் பள்ளியிலும் பின்பு மட்டக்களப்புக் கல்லூரியிலும் பிறகு ஆர்ச் மிக்கேல் கல்லூரியிலும் பயின்றார்.

1916-இல் மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்விலும் வெற்றி பெற்று, இலங்கையின் முதலாவது மதுரைத் தமிழ் சங்கப் பண்டிதர் என்னும் பெருமையையும் பெற்றார், 1919ல் தனது சொந்த முயற்சியில் கற்று, இலண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பி.எஸ்.சி. தேர்விலும் சித்தியடைந்தார்.

1924ல் சென்னை சென்ற மயில்வாகனனார், இராமகிருஷ்ண சங்கத்தில் சேர்ந்து "பிரபோதசைதன்யர்" என்னும் பிரமச்சரிய நாமம் பெற்றார். அதே ஆண்டு சித்திரைப் பெளர்ணமியில் துறவறம் மேற்கொண்டு ”சுவாமி விபுலானந்தர்” என்னும் பெயர் பெற்றார்.

1925ல் இலங்கை திரும்பிய அடிகளார் கல்லடி உப்போடையில் சிவானந்த வித்தியாலயமும் காரைதீவில் சாரதா மகளிர் கல்லூரியும் மற்றும் ஆதரவற்றோர் மாணவர், மாணவியர் இல்லங்களும் நிறுவி அளப்பாரிய கல்வித் தொண்டு செய்தார்.

பின்பு யாழ்ப்பாணம் வைதீஸ்வர வித்தியாலயத்தையும் திருகோணமலை இந்துக் கல்லூரியையும் இராமகிருஷ்ண ‘சங்கத்தோடு இணைத்ததோடு நில்லாது மலையகத்திலும் பாடசாலைகள் அமைத்து சகலருக்கும் சிறந்த கல்வித் தொண்டாற்றினார்.

1931ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் 1943ல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகவும் பணி புரிந்தார்.

அத்தனை சிறப்போடு மொழியியல் விஞ்ஞானியாக, அறிவியல் கலைஞராக, ஆத்மீக ஞானியாக, ஆற்றல்மிகு பேராசிரியராக, இயற்றமிழ் வல்லுனராக, இசைத்தமிழ் ஆராய்சியாளராக, நாடகத்தமிழ் நல்லாசிரியராக நமது தாயக மண்ணிலே நற்பணிபுரிந்தார்.

தமிழுக்காக, தமிழ் வளர்ச்சிக்காக, தமிழ் இனத்திற்காக, இனத்தின் கல்வி மலர்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்கள்.

விபுலானந்த அடிகளார் மனிதாபிமானம் மிக்கவர், ஆதித் தமிழ்க் குடியின் அறவழியில் வந்தவர். பாதியில் முளைத்தெழுந்த சாதிக் கொடுமைதனைச் சாடித் தகர்த்தெறிந்த சாதனைத் தமிழன் அவர், அன்னார் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த காலத்தில், ஒடுக்கப்பட்ட ஆதி திராவிடர் வாழ்ந்த திருவேட்களம் என்னும் சேரிக்குச் சென்று பாலர் படிக்கப் பள்ளிகள் அமைத்தார்.

முதியோர் கல்விக் கூடங்களும் ஏற்படுத்தினார். இதை அறிந்த உயர் சாதிப் பார்ப்பன்னர்கள் சுவாமி மீது ஆத்திரம் கொண்டனர். குடிப்பதற்குக் கூட நன்னீர் தர மறுத்தனர். இதனால் அடிகள் பலகாலம் உவர் நீரையே குடித்து வாழ்ந்தார்.

சைவத்தின் காவலர்கள் என்று எழுந்தவர்கள், சாதித்துவத்தின் காவலர்களாகத் திகழ்ந்தார்கள். மக்களிடையே ஏற்றத் தாழ்வுகளை விதைத்தார்கள். மனித குலத்தின் மடமைத்தனத்தின் உச்சநிலையான வருணப் பாகுபாடுகளை வளர்த்தார்கள்.

ஆனால் சுவாமி விபுலானந்த அடிகளோ, மக்கள் எல்லோரையும் சமமாக மதித்தார். சாதிப் பிரிவுகளை நீக்க உழைத்தார். எல்லோரும் சமமானவர்களே என்ற எண்ணத்தை மக்களிடையே விதைத்தார். கல்வி எல்லோருக்கும் பொதுவானது என்று நினைத்தார். தீண்டத்தகாதவர் என்று தீயவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்கு வழிசமைத்தார்.

அடிகளாரின் நீண்ட நாளைய இசை ஆராய்ச்சிப் பணி 1947ல் ”யாழ் நூல்” என உருப்பெற்றது. கரந்தைத் தமிழச் சங்கத்தின் ஆதரவில் திருக்கொள்ளும் புதூர் ஆலயத்தில் 20-06-1947, 21-06-1947 ஆகிய இரு தினங்களிலும் யாழ் நூல் அரங்கேற்ற விழா நடந்தேறியது.

தமிழ்நாட்டு மக்களிடையே கல்விமறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக தன்னிகரற்ற பணிகளை ஆற்றிய சுவாமி அவர்கள். ஈழத்திலும் ஏழைத் தமிழ் மாணவர்களுக்கு எழுத்தறிவித்த இறைவனானார். எவ்வித வேறுபாடுமின்றி எல்லா மக்களுக்கும் கல்வி கிடைப்பதற்காக யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் சுவாமி அவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராகப் பணிபுரிந்தோர் அவரதுகாலத்திற்கு முன்னர் என்றாலும் சரி, அவருக்குப் பின்னர் இன்றுவரை என்றாலும் சரி யாருமே பிறந்ததுமில்லை, உயர்ந்தவராய்த் திகழ்ந்ததுமில்லை, பணியிலே சிறந்ததுமில்லை.

தமிழர்களுக்குக் கல்வியுட்டுவதிலே தளராத அவரது முயற்சியினால் ஈழத்திலும் தமிழ்நாட்டிலும் எண்ணற்ற தமிழ் அறிஞர்கள் தோன்றினார்கள். பேராசிரியர்களாக, பண்டிதமணிகளாக, புலவர்மணிகளாக உருவாகினார்கள். வாழையடி வாழையாகத் தமிழ் வளர்ச்சியின் எருவாகினார்கள். அதனால் சுவாமியவர்கள் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் மொழி வளர்ச்சியின் கருவாகினார்கள்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் ஆராய்ச்சித் துறைக்கான பாடத்திட்டத்தினைத் தயாரித்தவர் சுவாமி விபுலானந்தர் அவர்களே. அதன்மூலம் சீரியவழியில் தமிழ் ஆராய்ச்சிக்கல்வி வளர்வதற்கும், தமிழ் ஆராய்ச்சிக் கலை தொடர்வதற்கும், தமிழ்மொழியின் நிலை உயர்வதற்கும் காலாக அமைந்தவர் சுவாமிகளே.

சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கத்தால் அமைக்கப்பட்ட கலைச்சொல்லாக்கப் பேரவையின் தலைமைப்பொறுப்பை ஏற்று அறிவியல் தமிழை உலகுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் அடிகளார் அவர்களே.

கணிதம், வரலாறு, பொதிகவியல், தாவரவியல், விலங்கியல், இராசாயனவியல், உடல்நலவியல், புவியியல், விவசாயவியல் ஆகிய ஒன்பது துறைகளில் கலைச்சொற்களை ஆக்குதற்காக ஒன்பது அறிஞர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த ஒன்பது குழுக்களுக்கும் பொதுத் தலைவராகவும், இரசாயனவியல் குழுவின் தலைவராகவும் விபுலானந்த அடிகள் நியமிக்கப்பட்டார்.

அடிகளாரின் தலைமையிலான அந்த அறிஞர் குழுக்களின் அரும்பணியினால் பத்தாயிரம் தமிழ்க்கலைச் சொற்களைக் கொண்ட  கலைச்சொல் அகராதி 1938 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. உலகின் அறிவியல் மலர்ச்சிக்குத் தகுந்தவகையில் தமிழ் மொழியின் வளர்ச்சி அமைந்திட இந்த அகராதி பெரும் பக்காற்றிக் கொண்டிருக்கின்றது.

சுவாமி அவர்கள், இந்தியாவில் இராமகிருஷ்ண மடத்தால் வெளியிடப்பட்ட ”வேதாந்த கேசரி” என்றும் ஆங்கிலப் பத்திரிகைக்கும், ”இராமகிருஷ்ண விஜயம்” என்னும் தமிழ்ப் பத்திரிகைக்கும் ஆசிரியராகப் பணியாற்றினார்.  அவரால் அவ்விதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளும், ஆசிரியர் தலையங்கங்களும் சமய உண்மைகளை விளக்குவனவாக மட்டுமன்றித் தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு என்பவற்றைப் பரப்புவனவாகவும் அமைந்திருந்தன.

தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னால் பாரதிக்குப்பின்னால் என்று இன்றைக்கு வரையறை செய்யப்படுகின்றது. அந்த அளவுக்குத் தமிழ் இலக்கியத்திலே தாக்கத்தை ஏற்படுத்தியவர் மகாகவி பாரதியார். பாரதியாரைப்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் வந்துவிட்டன. இலட்சக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. பாரதியைத் தெரியாத தமிழர்கள் பட்டிகளில், தொட்டிகளில்கூட இல்லை என்கின்ற அளவுக்கு அவரது பாடல்கள் படித்தவர்களையும், பாமரர்களையும் எட்டியிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் சுவாமி விபுலானந்த அடிகளே.

பாரதியாரின் முற்போக்குக் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத சாதிவெறிவிடித்த பிராமணப் பண்டிதர்கள் பாரதியை அவமதித்தார்கள். அவரின் பாடல்களை வெறுத்தார்கள். அவற்றை இலக்கியமென்று ஏற்க மறுத்தார்கள். மக்களுக்குத் தெரியவராதபடி மறைத்தார்கள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புறக்கணித்தார்கள்.

படித்தவர்கள், விவுலானந்தரின் அறிவை மதித்தவர்கள், அவருக்குப் பதவி அளித்தவர்கள் எல்லோருமே பாரதியைக் குழிதோண்டிப் புதைத்தார்கள். இத்தனை பேருக்கும் எதிராக பாரதியை மகாகவியாக படித்த மக்களிடையே உலவவிட்டவர் விபுலானந்த அடிகள் என்றால் அவரது அஞ்சா நெஞ்சத்தை என்னென்பது?

விபுலானந்தர் தோன்றாதிருந்திருந்தால், தமிழ் நாட்டில் கால் ஊன்றாதிருந்திருந்தால், மகாகவி பாரதியாரை உலகம் காணாதிருந்திருக்கும் பாரதியின் தமிழ் வீணாக மடிந்திருக்கும். சங்ககாலத்திற்கு முன்னர் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை ஆற்று நீரிலே எறிந்து அழித்ததைப்போல, தீயிலே போட்டு எரித்ததைப்போல சாதிவெறிபிடித்த மேதாவிகள் பாரதியின் பாடல்களையும் அழித்திருப்பார்கள்.

சுவாமி விபுலானந்தர் அவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்குப் பாரதியைக் கொண்டு சென்றதால் பாரதியை யாராலும் அழிக்க முடியவில்லை. விபுலானந்த அடிகளின் தமிழ்ப் பணிகளிலே இமயமென உயர்ந்து நிற்பவற்றிலே அவர் பாரதியாரின் பாடல்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தமையும் ஒன்றாகும்.

சங்க இலக்கியங்களுக்கு நிகராக எண்ணப்படுகின்ற, கங்கையில் விடுத்த ஓலை என்னும் அடிகளாரின் கவிதை மலரும், மற்றைய இனிமையான கவிதைகளும், எண்ணற்ற கட்டுரைகளும், இயற்றமிழுக்கு அவர் ஆற்றிய பணியினை இயம்பிக்கொண்டிருக்கின்றன.

விபுலானந்த அடிகளுடைய கல்லறையில் அவரே இயற்றிய இனிய கவிதை பொறிக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமாகும்.
இறைவனின் திருப்பாதங்களில் சூட்டப்படவேண்டிய மலர்கள் பற்றிப் பாடுகிறார் அடிகள்:

வெள்ளைநிற மல்லிகையோ, வேறெந்த மாமலரோ,
வள்ளலடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ?
வெள்ளைநிறப் புவுமல்ல வேறெந்த மலருமல்ல
உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.

காப்பவிழ்ந்த தாமரையோ, கழுநீர் மலர்த்தொடையோ
மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
காப்பவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்ல
கூப்பியகைக் காந்தளடி கோமகனார் வேண்டுவது

பாட்டளிசேர் பொற்கொன்றையோ பாரிலில்லாக் கற்பகமோ,
வாட்டமுறாதவர்க்கு வாய்த்த மலரெதுவோ?
பாட்டளிசேர் கொன்றையல்ல பாரிலில்லாப் புவுமல்ல
நாட்டவிழி நெய்தலடி நாயகனார் வேண்டுவது.

என்று “ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று” என்ற தலைப்பில் அடிகளார் பாடிய  பாடல்கள் அறிஞர் பெருமக்களால் விதந்து போற்றப்படுகின்றன.

அடிகள் மறைந்தாலும் அவர் முத்தமிழுக்கு ஆற்றிய பணிகள் என்றும் மறையாது.

நன்றி

Page 4 of 13

முத்துமாரி அம்மன் ஆலயம்

ஞான வேலாயுதர் ஆலயம்

சித்தி விநாயகர் ஆலயம் - சாந்தை

சம்புநாதீஸ்வரர் ஆலயம்

காடேறி ஞானபைரவர் ஆலயம்