முதியோர்கள் ”அறளை” பெயர்தலுடன் உயிர் வாழுதல்(LIVING WITH DEMENTIA)

Print

”அறுபதில் அறளை பேரும்” என்பதும், ”நாற்பதில் நாய்க்குணம் வரும்” என்பதும் எம்முன்னோர் அனுபவத்தால் தந்த முதுமொழிகள்.  வயது அறுபதை தாண்டிவிட்டால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு ஞாபகமறதி ஏற்படலாம். அத்துடன் அவர்கள் வேறு நோயினால் பீடிக்கப் பெற்று வாழும் நிலை ஏற்பட்டுவிட்டால் நிலைமை மோசமடைகின்றது. ஒருமுறை கூற வேண்டியதை பலமுறை கூறியும், மற்றவர்களில் செயலில் வெறுப்பைக் காட்டியும், எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவதுமாக பயித்தியம் பிடித்தவர்கள்போல் இருப்பார்கள். இதையே இளையோர் அறளை பேருதல் என்கிறார்கள். டாக்ரர்கள் இது ஒரு பருவ வருத்தம் என்கின்றார்கள்.

முதியவர்கள் அறளை பெயர்தலுடன் உயிர் வாழுதல் (LIVING WITH DEMENTIA)

மேற்படி தலைப்பிலான இக் கட்டுரையானது *சிரேஸ்ட உளநல மருத்துவர் Dr. திரு,பா. யூடிரமெஸ் ஜெயக்குமார், மட்டக்களப்பு.அவர்களால்* எழுதப்பட்டு,கனடா தமிழ் மருத்துவர் கழகத்தாரின் "நலம்தானா" சஞ்சிகையில் வெளிவந்ததாகும். இக் கட்டுரையை இணையங்களில் வெளியிட அநுமதி வழங்கிய கனடா வாழ் வைத்தியர் Dr. திருமதி. இ.லோகன் "அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து, எமது மக்கள் பலருக்கும் முதியவர்களைப் பராமரிப்பதில் இருக்கின்ற சிரமங்களைக் கருத்திற்கொண்டு இக் கட்டுரையை இங்கு பதிவு செய்கி்ன்றேன்.

உலக சுகாதார ஸ்தாபனம் அறுபது வயதைக் கடந்தவர்களை முதியோர்கள் (Eiderly Adult) என்கிறது. உலகம் முழுவதும் 800 மில்லியன் மக்கள் இவ்வயதில் வாழ்கின்றனர். இத் தொகையானது 2050ம் ஆண்டளவில் 02 பில்லியன் வரை அதிகரிக்கலாம். எனவும் எச்சரித்துள்ளது. அப்போது முதியோர் ஏனைய வயதினரை விட அதிகளவில் உயிர்வாழ்வார்கள்.இம் முதியோர்களில் பல்வேறு உடல், உள நோய்கள் ஏற்பட்டாலும் அறளை பெயர்தல் (னுந‍அநவெயை) மிகப் பொதுவாகக் காணப்படும் ஒரு கூட்டு நோய்க்குறித் தொகுதியாகும்.

அறளை பெயர்தல் (DEMENTIA)
பொதுவாக வழக்கில் ஞாபக மறதி நிலையை "அறளை பெயர்தல்" என்கிறோம்.சிறு வயதில் ஏதாவது மறந்த ஒருவரை  "அறளை" என அழைக்கின்றோம். முதுமையில் இதுவொரு நோய் குறித்தொகுதியாக உருவெடுக்கும் போதுமுதியவர்களில் ஞாபகமறதி, சிந்தனை, பேச்சாற்றல்,நடத்தைக் கோளாறுகள், நாளாந்த செயற்பாடுகளான குளித்தல், உணவருந்துதல், உடைமாற்றதல், கழிவறைச் செயற்பாடுகள் என்பன பாதிக்கப்படுவதோடு அவர் மற்றவர்களில் தங்கி வாழவேண்டிய நிலை அல்லது பராமரிப்பதற்கு பிரத்தியேகமான அணுகுமுறை தேவைப்படுகின்றது.

அறளை பெயர்தலிற்கான பொதுவான காரணங்கள்
பின்வரும் நோய்கள் அறளை பெயர்தலை ஏற்படுத்துகின்றன. Alzheimer's Disease (55%), Vascular Dementia (20%), சில உடல் நோய்களும் + போதைவஸ்து பாவனையும் (10%) மீளக்கூடிய காரணங்கள் (15%), மூளையின் உட்புற குருதிப்பெருக்கு, விட்டமின்" B12" குறைபாடு என்பனவாகும். அறளை பெயர்தல் நோய்க்குருதித்தொகுதி உடையவர்களில் மூளையின் கொள்ளளவு நரம்புகளின் செயற்திறன் என்பன படிப்படியாகக் குறைவடைகின்றது.  (Neuro-Degenerative Syndrome) இவை மீள முடியாதவை.

மருத்துவ சிகிச்சைகள்
குறித்த நோயாளி பொது வைத்திய நிபுணர்களின் மருத்துவ பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட்டு, குணமாக்கக்கூடிய உடல் நோய்கள் இருப்பின் அவற்றைக் குணமாக்குவதன் மூலம் வயோதிபரை மீள் நிலைக்கு கொண்டு வரலாம். இங்கு மனச்சோர்வு,உளமாய நோய்கள் (Psychosis) மாநாட்டம் (Delirium) என்பனவும் அறளை பெயர்தல் போன்று காணப்படலாம்.

அறளை பெயர்தலிற்கான சிகிச்சை முறைகள்
இங்கு மருத்துவ, மருத்துவமற்ற முறைகள் கையாளப்படுகின்றன. அறளை பெயர்தலை குணமாக்க முடியாது. இருந்தபோதும் முதியவரின் சிந்தனைப் பகுதி (Cognitive) மேலும் பாதிப்படைவதை தவிர்ப்பதற்கான மருந்துகள் காணப்படுகின்றன. ஆரம்பத்திலேயே இனங்காணுதல், முறையான உடல், உள மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டலில் மருந்துகளைப் பாவித்தல், சுயமாக இயங்குதல்.வாசித்தல், பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடுதல், குடும்பமாக வாழுதல், சமய, சமூக செயற்பாடுகளில் ஈடுபட வைத்தல் என்பன முதியவர்களில் அறளை பெயர்தலின் தாக்கத்தைக் குறைக்க உதவும்.

சிந்தனைப்பகுதி புத்துயிர்ப்பாக்கலிற்கு (Cognitive Enhancement), Tacrine,Donepezil,Rivastigmine,Selegilline,Vit-E என்பன பாவனையில் உள்ளன.

உளமாய நோய்கள், அலைந்து திரிதல் என்பனவற்றுக்கு குறைந்தளவில் (Rispendone,Olangapine,Qutapine என்பன பாவிக்கப்படுகின்றன.

உலகம் முழுவதும் அறளை பெயர்தலுடன் 35,6 மில்லியன் மக்கள் உயிர் வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. இத்தொகை 2050ம் ஆண்டளவில் 115,4 மில்லியனாக அதிகரிக்கும் என அறியப்பட்டுள்ளது.

அறளை பெயர்தலிற்கான பராமரிப்பு முறைகள்
அறளை பெயர்தலை குணப்படுத்த முடியாது.தவிர்க்க முடியுமான முயற்சிகள் தோற்றுப்போனால் பராமரிப்பு என்பது அவர் உயிருடன் இருக்கும் வரைக்கும் செய்யவேண்டியது. ஒரு குழந்தையைப் பராமரிப்பது என்பது தாயாருக்கே தெரியும்,ஆனால் முதுமையில் ஏற்படுகின்ற அறளை பெயர்தல் நோய் குறித்தொகுதியால் பாதிக்கப்பட்டவரை பராமரிக்கும் பக்குவம், பொறுமை,சகிப்புத்தன்மை, என்பன சாதாரணமானதல்ல.பெரும்பாலான மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட முதியவர்" நடிக்கிறார்" என தண்டித்த சந்தர்ப்பங்களையும் அறிந்துள்ளோம்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி உயிருடன் இருந்தால் அதில் ஒருவருக்கு ஏற்பட்டால் மற்றவர் ஏனைய குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உதவ முடியும்.இங்கு கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை,சமூக ஆதரவு எனபன பராமரிப்பாளர்களிற்கு உதவியாக அமையும்.சில வேளைகளில் அறளை பெயர்தலுடன், பார்வைக் கோளாறு, பாரிசவாதம், மூட்டு வாதம், கேளாமை போன்று ஒன்றுக்குப் பல பிரச்சினைகள் ஒரு முதியவரில் காணப்பட்டால் பராமரிப்பாளர்கள் மிகவும் களைப்படைந்து விடுவார்கள்.

தற்போதைய காலகட்டத்தில் தனிக்குடும்பம்,கணவன்,மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் தமது பெற்றோருக்கு அவர்கள் உதவி செய்யக்கூடிய நிலைமை காணப்படாது.

மேற்கத்தைய நாடுகளிலும்,வளர்முக நாடுகளிலும் முதியவர்களுக்கென இளைப்பாறல் கிராமங்கள், தனியான விடுதிகள்,பராமரிப்பு இல்லங்கள் காணப்படுகின்றன.இலங்கையில் இவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன.எதிர்காலத்தில் இவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அறளை பெயர்தல் நோயினால் ஏற்படும் தீவிர நடத்தைக் குழப்பங்களைக் கையாள்வதற்கான நடைமுறைக் குறிப்புகள்.

* நாளாந்தம் நிறைவேற வேண்டிய காரியங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றைத் தயார்செய்து வைத்துக்கொள்ளுங்கள்.எதையெதை எந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும் என்பதை இதன் மூலம் நீங்கள் அறிந்து வைத்திருப்பதால் இது உங்களது வாழ்வை மிக இலகுபடுத்தும்.

* முடியுமானவரை அவ் வயோதிபரை சுதந்திரமாக இருக்க விடுங்கள்.உதாரணமாக இந்நோயால் பாதிக்கப்பட்ட பலர் சுறுசுறுப்பின்றி உறுதியில்லாதவர்களாக இருப்பினும்,தமது உணவை தாமாகவே உட்கொள்ள இயலுமானவர்களாகவே இருப்பர்.

* அவர்களுக்கும் தன்மானம் உண்டென்பதை ஒருபோதும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.அவர் இருக்கும்போது அவரைப்பற்றி எதிர்மறையாகப் பேச வேண்டாம்.

* அவருடன் வாக்குவாதப்படுவதையும், முரண்படுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

* அவருக்கு வேண்டிய வேலைகளை எளிதாக அமைத்துக் கொடுங்கள்.அவருடன் சேர்ந்து சிரியுங்கள்.அவரைப் பார்த்து ஒருபோதும் கேலி செய்ய வேண்டாம்.

* அவருக்கு நீங்கள் உதவுவது அவரது ஆற்றலில் சிறந்த முன்னேற்றத்தைக் கொண்டுவரும்.அவரால் செய்யக்கூடிய,அவருக்குப் பயிற்சயாக இருக்கக்கூடிய சில இலகுவான வேலைகளை அவருக்குக் கொடுக்க முடியும்.

* அவரது மூக்குக் கண்ணாடி சரியாக அணியப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

* மெதுவாகவும்,தெளிவாகவும் அவருடன் உரையாடுங்கள்.அவர் அதைப்புரிந்துகொள்ளவில்லையெனில் சாதாரண சொற்களையும்,குறுகிய வாக்கியங்களையும் உபயோகித்து அவருக்கு அதைத் தெளிவுபடுத்த முயற்சி செய்யுங்கள்.

*முடியுமானபோதெல்லாம் அவர்மீது அன்பும்,பரிவும் காட்டுங்கள்.ஒரு அன்பான வார்த்தை ஆயிரம் மாத்திரைகளைவிடப் பெறுமதியானது.

* ஞாபக சக்திக்கு உதவுகின்ற விடயங்களைப் பயன்படுத்துங்கள். உதாரணமாக குளியலறை,மலசல கூடத்திற்கான வழியை ஒரு அம்புக் குறியிட்டுக் குறித்துக் காட்டுங்கள். ஒவ்வொரு நாளும் அன்றைய திகதியை எழுதுகின்ற எழுது பலகையில் எழுதுங்கள்.

* தேவையற்ற மருந்துகளைத் தவிருங்கள்.

குளிப்பும்,தனி நபர் சுகாதாரமும்.
* சுதந்திரம், உதவியின்றி தன்னால் முடிந்தறவு சுயமாக காரியங்களைச் செய்வதற்கு அவரை ஊக்குவிக்கவும்.

* தன்மானம், குளிக்கும்போது அவரது மறைவிடத்தை கீழாடைகொண்டு அல்லது ஒரு துணியால் எப்போதும் மறைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஒழுங்கு முறையில்மல,சலம் கழிக்கச் செய்ய உதவ வேண்டும்.

* கட்டிலில் ஓய்வாக இருக்கும் நேரப் பகுதியில் குடிபானங்களைக் குறைத்து வழங்குங்கள்.

* தேவையற்ற மருந்துகளைத் தவிருங்கள்.

குளிப்பும்,தனி நபர் சுகாதாரமும்.
* சுதந்திரம், உதவியின்றி தன்னால் முடிந்தறவு சுயமாக காரியங்களைச் செய்வதற்கு அவரை ஊக்குவிக்கவும்.

* தன்மானம், குளிக்கும்போது அவரது மறைவிடத்தை கீழாடைகொண்டு அல்லது ஒரு துணியால் எப்போதும் மறைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஒழுங்கு முறையில் மல,சலம் கழிக்கச் செய்ய உதவ வேண்டும்.

* கட்டிலில் ஓய்வாக இருக்கும் நேரப் பகுதியில் குடிபானங்களைக் குறைத்து வழங்குங்கள்.

* இரவில் சிறுநீர் கழிப்பதற்காக கட்டிலின் கீழ் பொருத்தமான இடத்தில் பாத்திரத்தை வையுங்கள்.

*  கட்டுப்பாடற்று மல,சலம் கழிக்கும் பிரச்சினையுடைய முதியவர்களுக்கு பேட்ஸ்களைப் (DIAPER) பயன்படுத்துங்கள்.

உணவு உண்ணல்.
*  விரல்களை உபயோகித்து உண்ணக் கூடிய உணவுகளை வழங்குங்கள்.

* உணவுகளைச் சிறு,சிறு துண்டுகளாக வெட்டிப் பரிமாறுங்கள்.

* கூடுமானளவு சூடான உணவுகளைப் பரிமாற வேண்டும்.

* கொடுக்கப்பட்ட உணவை எவ்வாறு சாப்பிடுவதென்று அவருக்கு ஞாபகப்படுத்துங்கள். (கையைப் பாவித்து அல்லது உணவுத் தட்டில் எவ்வாறு சாப்பிடுவதென்று).

*  உணவை விழுங்குவதில் பிரச்சினைகள் இருப்பின் விசேட வைத்திய நிபுணரிடம் காட்டுங்கள்.

*  சாப்பிடக் கூடிய,தயார் நிலையிலுள்ள உணவைப் பரிமாறுங்கள்

*  வீட்டை விட்டு அலைந்து திரிதல்.

* அவரைக் கண்டு பிடிப்பதற்கு இலகுவாக ஒரு கைப்பட்டியையோ, அல்லது மாலையையோ,அல்லது நிறமான ஆடைகளையோ அணிந்திருக்கச் செய்யலாம்.

* காணாமற்போய்த் தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட போது உங்களது கோபத்தை அவரிடம் காட்ட வேண்டாம்.

அறளை பெயர்தலின் படிநிலைகள்.
01. ஆரம்ப நிலை (EARLY STAGE).

இந்நிலையில் ஒருவர் குழப்பத்திற்குட்பட்டிருப்பதோடு, சற்றுமுன் நிகழ்ந்த விடயங்களை மறந்து விடுபவராகத் தோன்றலாம்.கவனத்தைக் குவிப்பதிலும், முடிவெடுப்பதிலும் சிரமங்களைக் கொண்டிருப்பார்.தனது வழமையான செயற்பாடுகளில் பிடிப்பை இழந்து விடலாம்.பொதுவாகக் குடும்பத்தவர்களும்,சுகாதார உத்தியோகத்தர்களும் இவ்வாரம்ப நிலையை வயது முதிரும்போது ஏற்படுகின்ற சாதாரண நிலையெனக் கருதுகின்றனர்.

02. மத்திம நிலை.(INTERMEDIATE STAGE)
குழப்பம்,மாறாட்டம் ஞாபக மறதி,மனோநிலை மாற்றங்கள் என்பன மிகவும் தீவிரமாகக் காணப்படும்.
நடத்தைப் பிரச்சினைகள், உதாரணமாக- மூர்க்கப் போக்கு, மற்றும் பாலியல் பிரச்சினைகள் என்பன உருவாக முடியும்.அவ்வயோதிபர் வீட்டைவிட்டு வெளியில் அலைந்து திரியலாம். அவரது தாக்கம் பெரிதும் பாதிக்கப்படுவதுடன்,தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும் அவரது ஆற்றலும் பாதிக்கப்படலாம். சாதாரண விடயங்களைக் கூட (ஆடை அணிதல்) சுலபமாகச் செய்ய முடியாமல் போகலாம்.அவர் நாளாந்தம் சாதாரணமாக பிறருடன் பேசுபவற்றைப் பேசவும், புரிந்துகொள்ளவும் சிரமப்படலாம்.

03. பிந்திய அல்லது காலங்கடந்த நிலை.(LATE STAGE)
அவர் தனது உறவினர்கள், நண்பர்களை அறிந்துகொள்ளமாட்டார்.உடல் எடை குறைதல், இடைக்கிடை வலிப்பு ஏற்படுதல்.சிறுநீர்,மலம் கழிப்பதில் கட்டுப்பாட்டை இழத்தல் என்பன காணப்படலாம்.அவருடன் எந்தவித பொருள் பொதிந்த உரையாடல்களையும் மேற்கொள்வது பெரும்பாலும் சாத்தியமாகாது.அவர் எல்லா நேரமும் குழம்பிய நிலையிலேயே காணப்படலாம்.

குழம்பியுள்ள நடத்தையுள்ள ஒரு வயோதிபரைக் கையாளும் போது நினைவிற் கொள்ள வேண்டியவை.
01.ஒரு வயோதிபரில் தொந்தரவு மிக்க நடத்தைகள் வெளிப்பட அறளை பெயர்தல் (DEMETIA) உளமாய நோய் ( PSYCHOSIS) குழப்பம்/மாறாட்டம் (DELIRIUM) அல்லது மனச்சோர்வு (DEPRESSION) என்பன காரணங்களாக இருக்க முடியும். முதலில் மேற்கண்டவற்றை இனங்கண்டு அவற்றுக்குச் சிகிச்சை அளித்தல் வேண்டும்.

02. ALZHEIMER'S DISEASE அறளை பெயர்தல் ஏற்படத் தொடங்குகின்ற பொதுவான காரணியாகும். தற்போது இதனைக் குணப்படுத்துவதற்கு எந்தவித சிகிச்சையும் இல்லை.

03. நடைமுறை ஆலோசனைகள், உணர்வு ரீதியான ஆதரவு நடத்தைப் பிரச்சினைகளுக்கு உதவும் மருந்துகள் என்பன பராமரிப்புச் சுமையைக் குறைப்பதற்கு மிகச்சிறந்த வழிகளாகும்.

04. முதியோர்கள் பாவிக்கின்ற பல மருந்துகளின் அளவு இளவயதினருக்குப் பயன்படுத்துகின்ற மருந்தின் அளவைவிட கிட்டத்தட்ட  மூன்றிலொரு பகுதியிலிருந்து அரைவாசி வரையாகும்.அநாவசியமான மருந்துகளைத் தவிர்க்கவும்.

05. வைத்தியரின் ஆலோசனையின் படியே மருந்துகளைப் பாவிக்கவும்.

அனுப்பி வைத்தவர்: சிவ சிவபாதம் அவர்கள்


முதியோர் தினத்தில்..ஒரு பெரியவரின் ஆதங்கம்...

திரும்பிப்பார் மகனே..

அப்பா என கூப்பிட்ட நீ
இப்போ யாரப்பா என்கிறாய்...
உன் மனைவி வந்தபின்
யாரோ என பாக்கிறாய்..

வயிற்றில் சுமந்தாள் அன்னை,
அவளுக்கு வலிக்கவில்லை...
தோளில் தினம் சுமந்தேன்
எனக்கும் வலிக்கவில்லை...
என்னை நீ சுமக்கவில்லை..
இருந்தும் எனக்கு வலிக்குறது..

மாதாந்தம் பத்தாம் திகதி
தினம் வராதா சொல்வாயா..?
பத்தாயிரம் பென்சனுக்கு
எங்கிருந்து வருகிறது
திர்டீரென அன்பெல்லாம்..???

முதுமை வந்த பின்னல் என்
முகம் பார்த்தும் நீ உன்
முகம் திருப்பி போகையில்
துடிக்காத என் இதயமும்
நொடிக்கு இருதரம் துடிக்குதடா...

திரும்பிப்பார் மகனே..

சிறுவயதில் உன்
இரவு திருவிழாவை
ஒரு வயதில்
நான் கூற சிரித்திருக்கிறாய்...
ஒரு நாள் கட்டிலில்
போனதற்காய்
கடிந்து விழுந்தாய்..
உணர்வே இல்லாமல்
தான் போகுதடா
இது கூட புரியலையா...!!

திரும்பிப்பார் மகனே

ஆறு வயதில் ஒன்றை
அறுபதுதரம் கேட்டும்
சொல்லியிருக்கிறேன்..
ஆறு தரம் தான்
அன்பாய் கேட்டிருப்பேன்..
அறுபது வயது தான்
ஆகிறது..."உனக்கு
அறளை பேந்து விட்டது,
என்கிறாள்
உன் மனைவி..

உங்களுக்கு ஆடை
வாங்குகையில் எனக்கும்
ஒன்று வாங்குங்கள்..
குளிப்பது சிரமமாக
இருக்கிறது... அடிக்கடி
உடையையாவது
மாற்றிக்கொள்கிறேன்..

குழந்தைகள் கூட
நெருங்க மறுக்கிறாய்
முதுமை தொற்றிவிடும் என்றா?
திரும்பிப்பார் மகனே..
முன்பு எங்கள் வீட்டு
பூனையை அணைத்து
மகிழ்ந்திருக்கிறாய்
நினைவிருகிறதா...??

தொழுவத்தில்
மாடுகளுக்கு வைக்கும்
கஞ்சி கலராய் இருக்கிறது
தினம் தரும் தேநீரை விட..
சத்து உணவு கேக்கவில்லை
சாகடிக்க தந்தால் போதும்
செத்து விடுகிறேன்....
வங்கியில் காசிருக்கு..
காப்புறுதியும் செய்திருக்கு..
அது போதும் உனக்கு
சுடலை வரைக்கும்...

தமிழ் நிலா

”அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடைஞ்சல்” வாசிக்க இங்கே அழுத்துக

 

 

 


BLOG COMMENTS POWERED BY DISQUS